தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் மண்ணை குளிர்விக்கும் வகையில் மழை பெய்தது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி பகுதிகளில், காலையில் இருந்தே பரவலாக மழை பெய்தது. தேனி மாவட்டம் அன்னஞ்சியில் மழையோடு சுழற்றி அடித்த சூறாவளியில், கடை ஒன்றின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.
மதுரை, நாகை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM