சென்னை: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் வழங்குதல், பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்புதல் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணினிமயமாக்குதல், உணவு தானிய சேமிப்புக்காக நபார்டு நிதி உதவியுடன் சேமிப்புக் கிடங்குகள் கட்டுதல், பொது விநியோகத் திட்டப் பொருள்களின் கடத்தலைக் கட்டுப்படுத்த கூடுதலாக 3 சிறப்பு சுற்றுக் காவல் படைகளை அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்தார். அவர் வெளியிட்ட 12 முக்கிய அறிவிப்புகள்:
> மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள், எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும்.
> கொளத்தூர் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்டப்படும்.
> அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும்.
> பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் (கேழ்வரகு) வழங்கப்படும்.
கேழ்வரகு சிறந்த ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது. நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடியினர், மலைவாழ் மக்களின் பிரதான உணவாக கேழ்வரகு உள்ளது. இம்மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வளர் பருவத்தினர் அதிகளவில் உள்ளனர். அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு வழங்கினால், அம்மாவட்ட மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதுடன், பழங்குடியினர், மலைவாழ் மக்களின் உணவு பழக்கவழக்கங்களும் பாதுகாக்கப்படும். எனவே பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்திற்கு இரண்டு கிலோ கேழ்வரகு அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
> உணவு தானியங்கள் சேமிப்பதற்காக 12 வட்ட செயல்முறை கிடங்குகள் மொத்தம் 28,000 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூபாய் 54 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் கட்டப்படும்.
> தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் புனரமைப்பு பணிகள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும்.
> தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினை முழுமையான கணினிமயமாக்குவதுடன், அதன் வரவு செலவு கணக்குகளை முறைபடுத்தி ஒப்பிட்டுக் கண்காணிக்க ஏதுவாக ஒரு தனித்த மென்பொருள் உருவாக்கும் திட்டம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
> கான்கிரீட் தரை மற்றும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் மொத்தம் ரூபாய் 70.75 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.
> திருவள்ளூர், பொள்ளாச்சி மற்றும் உத்தமபாளையம் ஆகிய இடங்களில் மறுபகிர்வு முறையில், 3 சிறப்பு சுற்றுக் காவல்படைகள் உருவாக்கப்படும்.
எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 5 சிறப்பு சுற்றுக் காவல் படைகள் உள்ளன. இவற்றுடன் பொது விநியோகத் திட்டப் பொருள்களின் கடத்தலைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும், ஆந்திரப் பிரதேசன் மற்றும கேரளா மாநில எல்லைகளில் உள்ள திருவள்ளூர், பொள்ளாச்சி மற்றும் உத்தமபாளையம் ஆகிய இடங்களில், 3 சிறப்பு சுற்றுக் காவல் படைகள் உருவாக்கப்படும். இதற்கான தொடரா செலவினம் ரூபாய் 44,74,500-ம் மற்றும் தொடரும் செலவினம் ரூபாய் 5,20,000-ம் (எரிபொருள் செலவினம்) அரசு நிதியிலிருந்து வழங்கப்படும்.
> குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தனித்து இயங்கும் கண்காணிப்புக் கேமராக்கள் வழங்கப்படும்.
> தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நடைமுறைகள் கணினிமயமாக்கப்படும்.
> ராணிப்பேட்டை மற்றும் திருமங்கலம் சேமிப்புக் கிடங்கு வளாகங்களில் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக தலா 3400 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் மொத்தம் 7.60 லட்சம் மெட்ரிக்டன் கொள்ளளவுக் கொண்ட 269 சொந்த சேமிப்புக் கிடங்குகள் பயன்பாட்டில் உள்ளது. இதில், ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் மொத்தம்17,800 மெட்ரிக் டன் கொள்ளளவுக் கொண்ட 5 கிடங்குகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக கிடங்குகள் 100 சதவீதம் கொள்ளளவுடன் முழு பயன்பாட்டில் உள்ளது. சந்தையின் தேவை மற்றும் சேமிப்புக்கான இடவசதி தேவையை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டை சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்புக் கிடங்கு ரூபாய் 2.80 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன சொந்த நிதியில் கட்டப்படும்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் மொத்தம்12,400 மெட்ரிக் டன் கொள்ளளவுக் கொண்ட 4 கிடங்குகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக கிடங்குகள் 100 சதவீதம் கொள்ளளவுடன் முழு பயன்பாட்டில் உள்ளது. சந்தையின் தேவை மற்றும் சேமிப்புக்கான இடவசதி தேவையை கருத்தில் கொண்டு திருமங்கலம் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்புக் கிடங்கு ரூபாய் 2.80 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன சொந்த நிதியில் கட்டப்படும்.