தமிழக மீனவர்களை விடுவிக்க 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு! எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்.!

இலங்கை கடற்படையால் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை பிணையில் விடுக்க ரூ.2 கோடி கட்ட கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், தாக்குதல் நடத்துவதும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வாகவே இருந்து வரும் சூழலில், கைது செய்யப்பட்ட மீனவர்களை பிணையில் விடுவிக்க இலங்கை மதிப்பில் ரூ.2 கோடி பணம் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. இந்த உத்தரவு கண்டனத்திற்குரியது.

இராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 23-ல் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மீனவர்களின் சிறைக்காவலை தொடர்ந்து இரண்டு முறை (மே 12 வரை) நீட்டித்து உத்தரவிட்ட கிளிநொச்சி நீதிமன்றம், இடைப்பட்ட நாட்களில் மீனவர்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு மீனவருக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.2 கோடி பணம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் நட்பு நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் சூழலில், மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு  ரூ.7,500 கோடி கடன் வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையில், சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய பல கோடி ரூபாய் பணம் கட்ட வேண்டும் என கூறுவது வேதனையான ஒன்றாகும்.

இலங்கை மக்களின் நலனில் இந்தியா எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்று நமது பிரதமர் மோடி தெரிவிக்கும் அதே நேரத்தில், தமிழக மீனவர்கள் நலன் குறித்து சிறிதும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.  தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் ஒன்றிய, மாநில அரசுகள் முழுமையாக தோல்வியடைந்து விட்டன என்பதயே தொடர் சம்பவங்கள் உணர்த்துகின்றன. 

ஆகவே, தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்கும் நடவடிக்கைகளையும், எதிர்காலத்தில் இலங்கை கடற்படையின் அத்துமீறலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.