நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்டோர் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கோவிட்-19 பூஸ்டர் டோஸ்களை தனியார் மையங்கள், மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி ஜனவரி 10ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இதன்மூலம், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுனர்கள், ஆஷா பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், காவலர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டமுன்களப் பணியாளர்கள் மூன்றாம் கட்ட முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவிட் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பட்சத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம். இது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறையில் வரவுள்ளது.
அனைத்து தனியார் தடுப்பூசி மையங்களிலும் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்.
ஏற்கனவே செலுத்தப்படும் தடுப்பூசிகள் செயல்பாட்டில் இருக்கும் என்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கைத் தவணை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கோவிஷீல்டு பூஸ்டர் டோசின் விலை ரூ.600 மற்றும் வரி என்று சீரம் நிறுவன தலைவர் அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.