பதற்றமே இல்லாத பதோனி: ஐ.பி.எல் அடையாளம் காட்டும் புதிய புயல்

IPL 2022 Tamil News: 15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் இரண்டு புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றன.

இந்தியாவில் கொரோனா அச்சம் இன்னும் நிலவி வருவதால், அதை தவிர்க்கும் வகையில் இந்த முறை லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 ஆட்டங்களும், புனேயில் 15 ஆட்டங்களும் இடம் பெறுகிறது. பிளே-ஆப் மற்றும் மே 29-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டி இடம் விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 25% சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் வீரர்களை உற்சபடுத்தியும், தங்களின் விருப்ப அணிக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

ஐ.பி.எல் அடையாளம் காட்டியுள்ள புதிய புயல்

உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பிரபலமான உள்ளூர் தொடராக ஐ.பி.எல் வலம் வருகிறது. பிரபலத்தை தவிர, இத்தொடர் பல இளம் மற்றும் துடிப்பான வீரர்களை அடையாளம் காட்டும் களமாகவும் இருந்து வருகிறது. இந்த களத்தில் ஜொலித்த வீரர்கள் அந்தந்த நாட்டு தேசிய அணிகளில் இடம்பிடித்துள்ளனர். மேலும், டி-20 அணியில் வாய்ப்பு கிடைக்கமால் தவித்து வந்த பல மூத்த வீரர்களுக்கு இந்த களம் கதவை திறந்துள்ளது. இதில் சமீபத்திய உதாரணமாக சென்னை அணியில் விளையாடி வரும் ருதுராஜ் கைக்வாட், கொல்கத்தா அணியில் விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் போன்ற இளம் வீரர்களை குறிப்பிட்டு கூறலாம்.

அந்த வகையில், நடப்பு தொடர் தொடங்கி 15 ஆட்டங்களே முடிந்துள்ள நிலையில், ஒரு புதிய, பதற்றம்மில்லாத, உத்வேகமுள்ள இளம் வீரர் ஒருவர் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் அந்த இளம் வீரர் தான் ஆயுஷ் பதோனி. இவரின் அதிரடியான ஆட்டத்தால் தான் லக்னோ அணி 2 முறை வெற்றியை ருசித்தது என்றால் நிச்சயம் மிகையாகாது.

22 வயது நிரம்பிய ஆயுஷ் பதோனி 2020-21 ஆம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டிராபியில் டெல்லிக்காக அணிக்காக அறிமுகமானார். நடந்த முடிந்த மெகா ஏலத்தில் அவரை லக்னோ அணி அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு வாங்கியது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பதோனி அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் லக்னோ அணி தோல்வியுற்று இருந்தாலும், அவரின் தனித்துவமான ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதேபோல், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய போது, 4 விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய பதோனி சிவம் துபே வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸர், மீண்டும் 20வது ஓவரில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அப்போது ஏனையோரின் பார்வையும் அவர் வசம் திரும்பியது.

இந்நிலையில், நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை விரட்டிய லக்னோவின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது, அப்போது ஹூடாவின் விக்கெட்டுக்கு பிறகு களம் புகுந்திருந்த பதோனி, ஷர்துல் தாக்கூர் வீசிய கடைசி ஓவரின் 2வது மற்றும் 3வது பந்தை சற்றும் தயங்காமல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பறக்க விட்டு பரபரப்பான ஆட்டத்தை அசத்தலாக முடித்து வைத்திருந்தார்.

பதோனியின் இந்த அதிரடியான ஆட்டத்தால் லக்னோ அணி திரில் வெற்றியை ருசித்தது. மேலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. தற்போது லக்னோ அணியின் ஒரு ஃபினிஷராக உருவெடுத்துள்ள பதோனி கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள் மற்றும் வல்லுநர்களின் பார்வை மீண்டும் ஒரு முறை தன்பக்கம் திரும்பியுள்ளார். அவரை அவர்கள் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்தியும், பாராட்டியும், அவரது திறனை மெச்சியும் வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.