ஹைதராபாத்: தெலங்கானா மாநில உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் சதீஷ்சந்திர சர்மா. இவர் தினமும் ஹைதராபாத் அபீட்ஸ் கூட்டு ரோடு வழியாக உயர் நீதிமன்றத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்றும் தலைமை நீதிபதி இதே வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அபீட்ஸ் கூட்டு ரோடு அருகே போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த ஊர்காவல் படை வீரரான அஃப்ரப் அலியை பார்த்த தலைமை நீதிபதி, தனது காரை சாலையில் நிறுத்த உத்தரவிட்டார். ஓட்டுநரும் என்னவென்று தெரியாமல் காரை சாலை ஓரத்தில் நிறுத்தினார். பின்னர், காரிலிருந்து பூங்கொத்துடன் இறங்கிய தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நேராக அங்கு பணியில் இருந்த ஊர்காவல் படை வீரர் அஃப்ரப் அலியிடம் சென்று, நான் தினமும் இவ்வழியாக நீதிமன்றத்திற்கு செல்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும் போதும் கவனிக்கிறேன். நீங்கள் கடமை உணர்ச்சியோடு பணியாற்றுகிறீர்கள். இதேபோல் தொடர்ந்து நன்றாக பணியாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.
‘‘இது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம். இனி என்னுடைய கடமை உணர்ச்சி அதிகரித்துள்ளது. பாரபட்சம் பார்க்காமல் கடமையை செய்வேன்’’ என்று அஃப்ரப் அலி மகிழ்ச்சியுடன் கூறினார்.