வீதிகளில் இறங்கி போராடுங்கள் – நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த இம்ரான்கான்

லாகூர்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. 
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கடந்த 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வாக்கெடுப்பிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்தார். 

அந்த பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால், இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து 60 நாட்களில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தன. இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும்,பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் இம்ரான்கான் அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் இம்ரான்கான் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்கள் நாளை வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். 
இது தொடர்பாக இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இறக்குமதி செய்யப்பட்ட அரசை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும். இறையாண்மை கொண்ட நாடான இந்தியாவிற்கு எந்த சந்தியும் கட்டளையிடுவதில்லை. 
பாகிஸ்தானின் அரசை மாற்றுவோம் அமெரிக்க தூதர் மிரட்டுகிறார். நான் நீதித்துறையை மதிக்கிறேன். ஆனால், தீர்ப்பு வழங்குவதற்கு முன் பெறப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை சுப்ரீம் கோர்ட்டு பார்க்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது. எதிர்க்கட்சிகள் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றன. 
எந்த நாடு இது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கும். நான் அமெரிக்காவுக்கு எதிரானவன் அல்ல ஆனால், ஒற்றைபக்க உறவு எங்களுக்கு தேவையில்லை. இந்தியாவை பாருங்கள்… வெளியுறவு கொள்கைகளில் எந்த நாடும் இந்தியாவுக்கு கட்டளையிடுவதில்லை.
ஜனநாயகத்தை பாதுகாப்பது மக்கள் தானே தவிர ராணுவம் அல்ல. மக்கள் முன் வந்து தேர்தலை அறிவியுங்கள். எதிர்க்கட்சிகள் ஊழலில் திழைத்துள்ளன. அவர்கள் மீதான வழக்குகளை புதைக்க நான் பதவியில் இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். போராட நான் தயார். நாடு முழுவதும் நாளை மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.