த்ரிஷ்யம் நடிகர் மீது மீ டூ புகார்

பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன். கடந்த 12 ஆண்டுகளாக நடித்து வரும் இவர் மலையாளத்தில் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2, சூடானி பிரம் நைஜீரியா, லூசிபர், ஒரு அடார் லவ் உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர படங்களுக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் காஸ்டிங் இயக்குனராகவும், நடிப்பு பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம், நம்ம கிராமம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். .

இவர் சில வருடங்களுக்கு முன் நடிப்பு பயிற்சிக்கு வந்த இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளார். இதனை தற்போது அந்த பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

மோனோ ஆக்டிங் வகுப்புக்காக அவரிடம் (அனீஷ் மேனன்) நான் சென்றேன். முதலில் என் கன்னத்தைப் பிடித்து பாசத்தை வெளிப்படுத்தினார். பின் மற்ற உடல் பகுதிகளையும் தொட ஆரம்பித்தார். எனது மார்பகங்களை பிடித்து சரி செய்தார். இது சங்கடமாக இருந்தது. இதனால், பயிற்சிக்கு துணைக்கு வருமாறு அம்மாவை அழைத்தேன். உடலைத் தொடுவது பயிற்சியின் ஒரு பகுதி என்று என் பெற்றோரையும் அவர் நம்ப வைத்தார். பிறகு அதிக உரிமை எடுத்துக்கொண்டு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். பயந்தேன்.

ஒரு முறை காதல் எக்ஸ்பிரஷன்கள் சரியாக வரவில்லை என்று சொல்லிக் கொடுத்தார். அப்போது என் கைகளை நன்றாக பிடித்துக்கொண்டு கழுத்தில் முத்தம் கொடுத்தார். பின்னர் சுவரில் சாய்த்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டார். என்னால் தடுக்க முடியவில்லை. அழுகை வந்தது. அப்போது திடீரென என் உதட்டைக் கடித்தார். அழுகையை அடக்க முடியாமல் என் பெற்றோருக்கு போன் செய்தேன். அவர்கள் என்னவென்று கேட்டபோது, வயிறு வலிக்கிறது என்று சொன்னேன். அவர்கள் வந்தார்கள். இனி மோனோ ஆக்டிங் வேண்டாம் என்று அவர்களிடம் சொன்னேன்.

ஏன் அனீஷ் ஏதும் செய்தாரா? என்று கேட்டனர். நான் இல்லை என்று சொன்னேன். அப்போது வரை அங்கு இருந்தவர், என் பெற்றோர் வந்ததும் ஓடிவிட்டார். என்னைப் போல பலர் அவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம். நான் எழுதியதால் இன்னும் சிலர் தைரியமாக புகார் கூற முன் வருவார்கள் என்று நினைத்தே இதை எழுதுகிறேன். அந்த நேரத்தில் என் பெற்றோரும் எனக்கு ஆதரவாக இல்லை என்பதுதான் வருத்தமானது.

இவ்வாறு அந்த பெண் எழுதியுள்ளார். இது மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனீஷ் மேனன் மீது மேலும் பல மீ டூ புகார்கள் வரலாம் என்று தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.