காஷ்மீரில் என்கவுன்ட்டர்: லஷ்கர் – இ – தொய்பா கமாண்டர் சுட்டுக்கொலை

ஜம்மு – காஷ்மீரில் இன்று நடந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய கமாண்டரான நிசார் தாஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சிர்ஹாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்தப் பகுதியில் காவல்துறை, சிஆர்பிஎஃப், ராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் தீவிரவாதிகள் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டை முற்றுகையிட்ட பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளை சரணடைந்து விடுமாறு எச்சரித்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
image
சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். உயிரிழந்த தீவிரவாதியின் உடைமைகளை பரிசோதித்த போது, அவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைமை கமாண்டராக இருந்து வந்த நிசார் தாஸ் (35) என்பது தெரியவந்தது. காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
image
இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள், அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிப்பதற்காக அனந்த்நாக் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.