BB Ultimate – 69: இறுதிக்கட்டத்தில் போட்டி; பைனலுக்குத் தயாரான போட்டியாளர்கள்; அந்த ஒருவர் யார்?

ஜூலியின் எலிமினேஷனைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் நான்கு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். பாலா, நிரூப், தாமரை மற்றும் ரம்யா. இதில் வெற்றிக் கோப்பையை பறிக்கப் போகிறவர் யார்? அது பாலாதான் என்கிற அழுத்தமான கணிப்பு பரவலாக உலவினாலும் கடைசி நேரத்தில் எதுவும் மாறலாம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற மேஜிக், பார்வையாளர்கள் தரப்பிலிருந்துகூட நிகழலாம். ‘சக மனிதர்களை சகித்துக்கொள்வது, ஒருவரை நிறை, குறையோடு ஏற்றுக்கொள்வது, முகமூடி இல்லாமல் இயன்ற வரை நேர்மையாக இருப்பது, புறணி பேசாதது, போன்றவைதான் பிக் பாஸ் வெற்றியாளருக்கு தேவையான அடிப்படை குணாதிசயங்கள். டாஸ்க்கில் வெல்வதெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். ‘சகிப்புத்தன்மை’ என்கிற பிரதான நோக்கில் யார் சிறந்தவர் என்பதை நன்கு யோசித்து வாக்களித்தால் வெற்றி வரிசையின் பட்டியல் எப்படி வேண்டுமானாலும் மாறுபடலாம். ஆகவே.. சிந்திப்பீர்.. செயல்படுவீர்..

எபிசோட் 69-ல் நடந்தது என்ன?

வழக்கம்போல் மெயின் எபிசோடில் சில முக்கிய விஷயங்கள் காட்டப்படவில்லை. அதில் மிகவும் முக்கியமானது ஜூலியின் எலிமினேஷன். எனவே இதை தேடிப் பார்க்க வேண்டியிருந்தது. இந்தப் பகுதி ஒரு பக்கம் எமோஷனலாகவும் இன்னொரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது. இறுதிப் போட்டியாளர்கள் அனைவரையும் ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு வரச்சொன்ன பிக் பாஸ் அவர்களின் கண்களைக் கட்டிவிட்டார். ஒரு மர்ம மனிதர் உள்ளே நுழைந்து வரிசையாக ஒவ்வொருவரையும் வீட்டின் ஒவ்வொரு மூலையில் உள்ள ரகசிய அறைக்கு அழைத்துச்சென்றார்.

தாமரை

பிக் பாஸ் ஆடிய எலிமினேஷன் டிராமா

நிரூப் மட்டும் அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் நிரூப். “கடைசியா என்ன சொல்ல வர்றீங்க?” என்று பிக் பாஸ் விளையாட்டு காட்டியவுடன் “நான் எவிக்ட் ஆயிட்டனா?” என்று பரிதாபமாக கேட்டார் நிரூப். பிக் பாஸ் சற்று போக்கு காட்டி விட்டு “வீட்டுக்குள்ள போங்க” என்றவுடன் ஆனந்த அதிர்ச்சியில் அழத்துவங்கி விட்டார் நிரூப். ஆம், நீண்ட காலத்திற்குப் பிறகு நிரூப் அழுத காட்சியைப் பார்க்க முடிந்தது.

இன்னொரு பக்கம், கன்ஃபெஷன் ரூமில் தாமரையை அமர வைத்து விளையாடினார் பிக் பாஸ். “நான் போ மாட்டேன்” என்று சிணுங்கிய தாமரை, பிறகு ‘மத்தவங்க கிட்ட சொல்லாம எப்படி போறது?.. ஃபைனல் மேடையைத் தொடணும்னு ஆசைப்பட்டேன். மக்கள் இப்படி பண்ணிட்டாங்களே” என்று கலங்கியவர் “அவங்களும் தப்பு பண்ணியிருக்க மாட்டாங்க” என்று அந்தச் சமயத்திலும் ஜாக்கிரதையாக ஒரு பிரேக் போட்டார். “எல்லாத்துக்கும் ஆரம்பம்ன்னு ஒண்ணு இருந்தா முடிவும் இருக்கும் இல்லையா?” என்றெல்லாம் வார்த்தைகளை வைத்து விளையாடிய பிக் பாஸ் “ஓகே.. என் Prank-க்கிற்கும் முடிவு இருக்கு” என்றவுடன்தான் தாமரைக்கு மூச்சே வந்தது. மகிழ்ச்சியில் சிரிக்க ஆரம்பித்து “ஏன் பிக் பாஸ் இப்படில்லாம் பண்றீங்க. அய்யாங்”.. என்று சிணுங்க ஆரம்பித்து விட்டார் தாமரை. “நீங்களும் அழற மாதிரி நடிச்சது சிறப்பு” என்று பிக் பாஸ் சொன்ன கமென்ட் சூப்பர். மிக சந்தோஷமாக வீட்டிற்குள் சென்றார் தாமரை.

ரம்யா

ஆனால் பாலா மற்றும் ரம்யாவிடம் இம்மாதிரியான விளையாட்டையெல்லாம் பிக் பாஸ் நிகழ்த்தவில்லை. (இதில் ஏதாவது செய்தி இருக்கிறதா?!) அது சரி, ஜூலிக்கு என்னவாச்சு? என்று கேட்கிறீர்களா? அந்தப் பகுதியை மர்மத் திரைப்படம் மாதிரியே முடித்து விட்டார். அவர் எவிக்ஷன் ஆகி விட்டார் என்று இதர போட்டியாளர்களைப் போலவே நாமும் யூகித்துத்தான் அறிய வேண்டியிருந்தது. ஆகவே ஜூலி கதறியழும் காட்சி மிஸ்ஸிங்.

பிக் பாஸ் எப்படியிருப்பார்… உங்கள் கற்பனை உருவம் என்ன?

ஓகே. இப்போது மெயின் எபிசோடிற்கு வருவோம். ‘அடிச்சிக்க.. அடிச்சிக்க’ என்கிற குத்துப் பாடலை 68-ம் நாளின் காலையில் அலற விட்டார் பிக் பாஸ். கோப்பையை வெல்வதற்கு ‘அடிச்சிக்க’ என்று பொருள் போலிருக்கிறது. விஜய்சேதுபதியின் குரல் சாயலில் “போஸ்ட் வந்திருக்கு” என்கிற டிராமா குரல் கேட்டது. காலை டாஸ்க் தொடர்பான அறிவிப்பு அது. ‘பிக் பாஸ் எப்படியிருப்பார்’ என்று ஒவ்வொருவரும் செய்து வைத்திருக்கும் கற்பனையை பொதுவில் சொல்ல வேண்டுமாம். ஏதோ ‘பேட்டை ரவுடி’ ரேஞ்சிற்கு தன் மனதில் இருந்த கற்பனையைச் சொன்னார் பாலா. “என் பார்ட்னர் அவர்.. பொண்ணுங்களுக்கு பிடிச்ச மாதிரி அளவா சிரிப்பாரு.. 5.7 உயரம்…” என்று மாப்பிள்ளை பார்ப்பது போலவே வர்ணித்துக் கொண்டிருந்தார் ரம்யா. “மாஸா.. கெத்தா. வில்லன் பாத்திரத்திற்கு பொருத்தமா இருப்பார்” என்றார் ஷாரிக். “எனக்கு எப்பவுமே என் தாய் மாமன் ஞாபகம்தான் வரும். அவர் கூப்பிட்டாலே எனக்கு தூக்கி வாரிப்போடும். பிக் பாஸூம் அப்படித்தான்” என்றார் தாமரை.

BB Ultimate சலூனில் போட்டியாளர்கள்

“யார் யார் ஃபைனலுக்கு வருவாங்க?” என்கிற உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதன் தலைமை?.. வேறு யார்.. சிந்தனாவாதி அனிதாதான்.. “பாலா சில டாஸ்க்கையெல்லாம் விளையாடாம விட்டுட்டான்” என்று புகார் சொல்லிக் கொண்டிருந்தார் அபிநய். திருவிழாவிற்கு ஆடுகளை தயார் செய்வது போல இறுதிப் போட்டிக்கு போட்டியாளர்களை அழகுப் படுத்தும் ‘சலூன்’ காட்சிகள் இன்னொரு புறம் காட்டப்பட்டன.

“எலிமினேஷன்ல கண்ணைக் கட்டினப்ப நிரூப் அழுதானாமே.. கேட்கவே கஷ்டமா இருந்துச்சு” என்று உருகினார் தாமரை. “ஆமாம்.. பயபுள்ள அழவே மாட்டான்.. கேட்டப்ப எனக்கும் ஃபீலாச்சு” என்று அதை எதிரொலித்தார் பாலா. நிரூப்பிற்கும் பாலாவிற்கும் இடையே ஆயிரம் முட்டல்கள் இருந்தாலும், அடிநாதத்தில் ஒரு பாச வயர் ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டில் அடித்துக் கொண்டாலும் உள்ளூற பாசத்தை ஒளித்து வைத்திருக்கும் சகோதரர்கள் மாதிரி.

அதிரடியான குறும்புடன் உள்ளே வந்த சுரேஷ் தாத்தா

மெயின் கேட்டில் ஒரு பாடல் ஒலித்தது. ‘நான் யாரு. நான் ராஜா’ என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க, கெத்தாக உள்ளே நுழைந்தவர் சுரேஷ் தாத்தா. கட்அவுட்டின் மீதிருந்த துண்டை எடுத்து வந்து அவசரமாக அவருக்குப் போர்த்திவிட்டார் பாலா. வீல் சேரில் இருந்த ரம்யாவைப் பார்த்து ‘அச்சச்சோ’ என்று வருந்திய சுரேஷ், “பாலா.. உனக்கு வெளியே நல்ல பாராட்டு கிடைச்சுது. ஒருத்தர் வலில கதறிட்டு இருந்தப்ப கூட டாஸ்க்தான் முக்கியம்ன்னு ஆடின பார்த்தியா.. என் பெயரைக் காப்பாத்திட்ட” என்று சுரேஷ் பாராட்டியதில் கன்னாபின்னாவென்று சர்காஸ்டிக் கிண்டல் வாசனை அடித்தது. சுற்றியிருந்தவர்கள் இதைப் புரிந்து கொண்டு சிரிக்க, பாலாவும் சங்கடமாக சிரித்தார். வந்தவுடனேயே தன் வேலையை ஆரம்பித்து விட்டார் சுரேஷ் தாத்தா. உடம்பு இன்னமும் முழுதாக சரியாகவில்லையென்றாலும் தாத்தாவின் குறும்பு குறையவில்லை.

மக்கள் ஓய்வாக படுத்துக் கொண்டிருக்க “கை காலை உடைக்கற மாதிரி ஏதாச்சும் டாஸ்க் கொடுங்க பிக் பாஸ்” என்று கொளுத்திப் போட்டார் சுரேஷ். ரம்யாவின் மீது தனியான பாசத்தைப் பொழிந்த சுரேஷ் (பெயர் ராசியோ?!) “இந்தப் பொண்ணு வீல்சேர்ல உலாத்தறதைப் பார்த்துதான் எனக்கும் தோணுச்சு. நாமும் அப்படியே விளையாடியிருக்கலாமோன்னு. உடம்பெல்லாம் மூளை இருக்கற பொண்ணு” என்று ரம்யாவை பாராட்டித் தள்ளினார் சுரேஷ். “எனக்கு கூட தோணலை. ஷாரிக்தான் பிக் பாஸ் கிட்ட கேட்டு வாங்கினான்” என்று சிரித்தார் ரம்யா.

சுரேஷ்

‘யாரோ இவன்?’ என்கிற தலைப்பில் ஒரு ஜாலியான டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஏதாவது ஒரு போட்டியாளரை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் கிண்டலடித்து வறுத்தெடுக்க வேண்டுமாம். முதலில் வந்த தாடி பாலாஜியும் அனிதாவும், தாமரை – பாலாவின் பாசத்தை ரகளையாக கிண்டலடித்து நாடகமாக நடித்துக் காட்டினார்கள். ஆனால் தாமரை இதை அத்தனை ரசிக்கவில்லை. பாலாவின் காதில் ஏதோ ரகசியம் பேசினார். அனிதா ஓவர்ஆக்ட் செய்தது அவருக்குப் பிடிக்கவில்லையோ, என்னமோ?! அடுத்ததாக நிரூப்பின் உடல்மொழியை ஓரளவிற்கு சிறப்பாகப் பிரதிபலித்தார் அனிதா. குறிப்பாக வாயைக் கோணியபடி நிரூப் பேசும் பாணியை சரியாகவே வெளிப்படுத்தினார்.

தாடி பாலாஜியின் உடல்மொழியை ஏறத்தாழ கச்சிதமாகச் செய்து அசத்தினார் ஷாரிக். அவர் மோவாயை தேய்ப்பது, குழறிப் பேசுவதில் ஆரம்பித்து ‘வெடிகுண்டு’ வீசும் வேலையைக்கூட ஜாலியாக செய்துவிட்டார். கதா காலட்சேப ஸ்டைலில் தன் நீண்ட பொழிப்புரையை ஆரம்பித்த சுரேஷ் அல்டிமேட் சீசனை ஆரம்பித்து விட்டு இப்படியொரு போட்டியாளர்களையும் வைத்துக் கொண்டு பிக் பாஸ் படும் பாட்டை சுவாரசியமாக விவரித்தார் சுரேஷ். உள்ளே இருந்த பிக் பாஸ் கூட இதை ரசித்திருப்பார் என்று தோன்றுகிறது.

பாலாவை ஓரங்கட்டி நீண்ட நேரத்திற்கு அட்வைஸ் செய்த சுஜா!

மெயின் கேட்டில் மீண்டும் பாட்டுச் சத்தம். திருமண வீட்டிற்குச் செல்பவர் மாதிரியான தோற்றத்தில் பட்டுப்புடவை பளபளக்க உள்ளே வந்தவர் சுஜா. இவரும் ரம்யாவை கரிசனத்துடன் விசாரித்து விட்டு மற்றவர்களிடம் உரையாடினார். சுஜா கொண்டு வந்திருந்த இனிப்பை அனைவரும் பாய்ந்து எடுத்துக் கொண்டார்கள். ஷாரிக் மட்டும் சற்று ஒதுங்கியே இருந்தார்.

திருமண வீடுகளில் சில பெண்மணிகள் ஓரமாக சேர் போட்டு அதுவரை பேச நினைத்த வம்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமா பேசித் தள்ளுவார்கள் அல்லவா? அது போல பாலாவை தனியாக ஓரங்கட்டிய சுஜா, நீண்ட நேரத்திற்கு அட்வைஸ் மழையாக பொழிந்து கொண்டிருந்தார். அதன் சாரம் என்னவெனில், “தாமரை கிட்ட ஏன் இவ்வளவு பாசம் காட்டறே. அது உன் விளையாட்டைப் பாதிக்குது.. நீ தனியா விளையாடினா எங்கயோ போயிடுவே” என்பதை சுற்றிச் சுற்றி வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டேயிருந்தார் . ஏறத்தாழ போட்டியே முடியும் நேரத்தில் இது தேவையில்லாத ஆணி என்றாலும் இறுதிக்கட்டத்தின் வாக்குகளில் சலனத்தை ஏற்படுத்தலாம்.

பாலா – சுஜா

சுஜாவின் அறிவுரையை பாலா உள்ளூற ரசிக்கவில்லை என்று தோன்றுகிறது. “சரி.. மேடம்.. நல்லதுக்குத்தானே சொல்றாங்க” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டு “டாஸ்க்குன்னு வந்துட்டா யார் கிட்டயும் பாசம் காட்ட மாட்டேன்” என்று விளக்கம் தர “நானும்தாண்டா தம்பி. அப்படி விளையாண்டேன். ஆனா வீட்டுக்குள்ள புழங்கறதும் முக்கியமாம். வெளில இருந்து பார்க்கறபோது அப்படித்தான் தெரியுது” என்று விடாமல் அறிவுரையை நீட்டி முழக்கினார் சுஜா. “நானும் மனுஷன்தான். பேசறதுக்கு ஆள் வேணுமில்ல..” என்று பாலா சொல்ல “தாமரையும் லேசுப்பட்ட ஆள் இல்லை. நம்மள சம்பளம் கொடுத்து கூட்டிட்டு வந்தது எதுக்கு?.. வாங்க கன்டென்ட் கொடுக்கணும்”ன்னு என்னைக் கூப்பிட்டாங்க.. தாமரை அவ்வளவு தெளிவா இருக்காங்க” என்பது போல் போட்டுக் கொடுத்தார் சுஜா.

நினைவுகளின் ஊர்வலம் – மனதில் மகிழ்ச்சிக் கலவரம்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற பெயரில் மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கும் வேலையை ஆரம்பித்தார் பிக் பாஸ். இதுதான் கடைசி லட்டாம். இதுதான் கடைசி வாரம் என்பதால் கையில் வைத்திருக்கிற கரன்ஸியை காலி செய்து தீர்த்து விடலாமா என்கிற யோசனை ஒருபக்கம் ஓடினாலும், இன்னொரு பக்கம் இதிலும் ஏதாவது டிவிஸ்ட் இருந்தால் என்ன செய்வது என்கிற தத்தளிப்பு அனைவரிடமும் இருந்தது. அதை உறுதிப்படுத்துவது போல “இந்தக் கரன்ஸி.. இன்றும் நாளையும் மட்டுமே செல்லுபடியாகும். வெளில எடுத்துட்டு போனா கேஸ்ல மாட்டிப்பீங்க” என்று ஜாலியாக எச்சரித்தார் பிக் பாஸ். ‘நாளையும் செல்லுபடியாகும்’ என்கிற குறிப்பை வைத்துப் பார்த்தால் இறுதிப்போட்டிக்கு கையில் வைத்திருக்கும் கரன்ஸி ஏதோவொரு வகையில் உதவும் என்று தோன்றுகிறது.

“எல்லோரும் கார்டன் ஏரியாவிற்கு வாங்க” என்று அழைத்தார் பிக் பாஸ். அங்கே இந்தச் சீசனில் நடந்த முக்கிய நினைவுகளின் புகைப்படங்கள் அழகான முறையில் அலங்கரித்து மாட்டப்பட்டிருந்தன. இதற்காக செய்யப்பட்டிருந்த லைட் செட்டிங் அற்புதமாக இருந்தது. “இங்க பாரேன்.. நீ இங்க வா. இதைப் பாரு” என்று நிரூப்பும் தாமரையும் குதூகலமாக இந்த விஷயத்தைக் கொண்டாடினார்கள். மற்றவர்களிடம் அத்தனை சுரத்து இல்லை. இதில் உச்சம் சுஜாதான். “என் போட்டோவே இல்லை. நான் என்னத்த பார்க்கறது?” என்று நினைப்பது மாதிரி சோபாவில் அமர்ந்து விட்டார். “நான் எம்பூட்டு அளகா இருக்கேன்” என்று புகைப்படத்தில் பார்த்து தன்னையே கொண்டாடிக் கொண்டிருந்தார் தாமரை.

பாலாஜி

அடுத்ததாக ஒரு வீடியோவைக் காட்டத் துவங்கினார் பிக் பாஸ். “வெவ்வேறு உணர்வுகளின் பரிமாணங்கள்.. உணர்வுக் குவியலின் பக்கங்கள்.. உறவுகளாய் வாழ்ந்த நொடிகள்’ என்கிற அற்புதமான முன்னுரையுடன் வீடியோ ஆரம்பித்தது. அல்டிமேட் என்கிற எழுத்துக்களின் வண்ண விளக்குகள் வீட்டின் முகப்பில் இருக்க, போட்டியாளர்கள் நுழைந்த முதல் நாள் காட்சி துவங்கி பல உணர்வுப்பூர்வமான காட்சிகள் வந்தன. அனிதா – நிரூப், தாடி பாலாஜி – வனிதா, அபிராமி – ஜூலி, தாடி பாலாஜி – சிநேகன், சுருதி – நிரூப், அபிராமி – அபிநய் ஆகியோர்களுக்கிடையே இருந்த பாசப் பிணைப்பு, நட்பு தொடர்பான நெகிழ்வான காட்சிகள் வந்தன. பாலா – தாமரையின் பாசக் காட்சிகளை காட்டத் துவங்கியவுடன் குழந்தை போல குதூகலித்தார் தாமரை. நிரூப் – தாமரை தொடர்பான காட்சிகளும் வந்தன. வீடியோ முடிந்ததும் ஒரு மினி ரோலர் கோஸ்டரில் பயணம் செய்த உணர்வு அனைவருக்கும் வந்திருக்கும்.

இன்றைய பிரமோவின் மூலம் பிரியங்கா, முகேன், பாவ்னி ஆகியோர் விருந்தினர்களாக உள்ளே வந்திருப்பதை அறிய முடிகிறது. எனவே கொண்டாட்டக் களை மேலும் கூடும். ஜூலி எலிமினேட் ஆனது ஒருபக்கம் வருத்தம் என்றாலும் கடந்த சீசனில் கிடைத்த அவப்பெயரை முற்றிலுமாக துடைத்து விட்டு மக்களின் பாராட்டுக்களையும் அன்பையும் சம்பாதித்திருக்கும் விதத்தில் ஜூலி வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.