மழையில் மரத்தடியில் அமர்ந்து மதுகுடித்துக்கொண்டிருந்த போது இடிதாக்கியதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பெரம்பலூர் கம்பன் தெருவைச் சேர்ந்த செல்லதுரை, கவுள்பாளையத்தை சேர்ந்த ராமர், வெங்கடேஷ் ஆகிய மூன்று பேரும் கோனேரிபாளையம் மலைப்பாதை அருகேயுள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, சிறிது நேரம் லோசான மழை பெய்துள்ளது. மழையின் இடையே பலத்த சத்ததுடன் இடி மின்னல் தாக்கியுள்ளது. இதில் செல்லதுரை மற்றும் ராமர் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்கள்.
வெங்கடேஷ் கை, கால்கள் இழுத்துக்கொண்டு மயங்கிய நிலையில் கிடந்தார். வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த கூலித்தொழிலாளர்கள் இதனை பார்த்து பதறி அடித்துக்கொண்டு அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
பின்பு வெங்கடேஷின் உடம்பில் உயிர் இருப்பதை அறிந்துக்கொண்ட அவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்று இடிதாக்கி இறந்தவர்களின் உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள காரை மேலதெருவைச் சேர்ந்த குமாரின் வயலில் உள்ள தென்னை மரத்தடியில் இரண்டு பசு மாடுகளை கட்டி வைத்திருந்திருந்தார். இடி மின்னலுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.