உக்ரைனில் நடந்து வரும் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இந்த தாக்குதல் தீவிரமடையலாம் என தெரிகிறது. நேற்று ( ஏப்.8) ல் ரயில்வே ஸ்டேஷன்களில் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை நேட்டோ எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய தாக்குதல் துவங்கியதாக அங்கிருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள 2 ரயில் நிலையங்களில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடந்ததாகவும், 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், பலர் காயமுற்றதாகவும் அஞ்சப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலை ரஷ்யா மறுத்துள்ளது.
5,149 குற்றப்பட்டியல்
உக்ரைனில் ரஷ்யா போர்குற்றம் புரிந்துள்ளது என உக்ரைனின் நட்பு நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யா நடத்திய போர்குற்றங்களை பட்டியலிட்டுள்ளது. இதன் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு தகவலில்: ரஷ்யா இது வரை மொத்தம் 5,149 போர் குற்றம் புரிந்துள்ளது. உக்ரைன் தேசிய பாதுகாப்பு படையினருக்கு எதிராக குற்றம் புரிந்தததாக 2,541 வழக்குகளும், கொடூர குற்றம் 432 என்றும் தெரிவித்துள்ளது. இதுபோல் 169 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 306 குழந்தைகள் காயமுற்றதாகவும் இந்த விவரத்தில் கூறப்பட்டுள்ளது. போர் சட்டங்களை மீறிய ரஷ்யா , உக்ரைன் நாட்டு சட்டங்களை மீறியதாகவும் தெரிவிக்கிறது சட்ட அமைச்சகம்.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெற வேண்டும் என அமெரிக்க பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான்கிர்பி கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக தங்களின் நாட்டை காப்பாற்ற உக்ரைன் மக்கள துணிச்சலுடன் போராடி வருகின்றனர்.
புச்சா: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நிலையில், நாட்டின் தென்கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்தின் எதிர் தாக்குதலால், தலைநகர் கீவ் நகருக்குள் நுழைய முடியாமல் ரஷ்யப் படைகள் திணறின.
கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணங்கள்
இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சில், தலைநகர் கீவில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா அறிவித்தது.அதன்படி அங்கிருந்து ரஷ்யப் படைகள் திரும்பத் துவங்கியுள்ளன. இந்நிலையில், கீவ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில், எரிந்த நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பல சடலங்கள் சாலைகளில் கிடப்பது தெரியவந்தது. இதற்கு பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் கூறிஉள்ளதாவது:ரஷ்யா அப்பாவி மக்களை கொன்று போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட உள்ளது. தலைநகர் கீவ் நகரில் இருந்து வெளியேறிய ரஷ்ய ராணுவம், நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. ரஷ்ய ராணுவ ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் வழியாக உக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருகிறது. இதை எதிர்க்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
பயங்கரவாத நாடு
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்யாவின் போர் நடவடிக்கை, எந்தவொரு பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளுக்கும் சற்றும் குறைவில்லாததாக இருக்கிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஒரு நாடே இதுபோன்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், உக்ரைனில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
‘ஆசிட் டேங்கர்’ வெடிப்பு
உக்ரைனின் கிழக்கே உள்ள லுஹான்க்ஸ் பகுதி மக்களுக்கு அந்தப் பிராந்திய அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில், ‘நைட்ரிக் ஆசிட்’ ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்துச் சிதறியுள்ளது. இதனால், நச்சுப் புகை பரவும் அபாயம் உள்ளது. அதனால், ஜன்னல் உள்ளிட்டவற்றை மூடி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமபடி, பிராந்திய அரசு எச்சரித்துள்ளது.
சோகத்தை ஏற்படுத்திய படம்
உக்ரைன் நாட்டவர்களை ரஷ்ய வீரர்கள் சித்ரவதை செய்து, கொலை செய்து உடல்களை சாலைகளில் வீசியுள்ள படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான படம் ஒன்று போரின் சோகத்தை உணர்த்தியுள்ளது.தன் சிறு குழந்தையின் முதுகில் தாய் தன் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை எழுதியுள்ளார். ஒருவேளை தான் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டால் அல்லது பிரிய நேரிட்டால், குழந்தையால் குடும்பம் குறித்த விபரங்களை தெரிவிக்க முடியாது என்பதால், அதன் முதுகில் எழுதியுள்ளதாக அந்த தாய் தெரிவித்துள்ளார். இதுபோல, பல பெற்றோர், தங்களுடைய விபரங்களை குழந்தைகளின் முதுகில் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் பார்வை
உக்ரைனில் 40 நாட்களுக்கும் மேலாக ரஷ்யபடையினரின் தாக்குதல் நீடித்து வருகிறது. அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி அசராமல் அவரது மாளிகையில் இருந்தாவறு மக்களுக்கு அச்சத்தை தீர்க்கும் வகையில் பேட்டி அளித்து வந்தார். மேலும் வெளிநாட்டு உதவிகளை கேட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அதிபர் செலன்ஸ்கி ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் புச்சா என்ற நகருக்கு சென்றார். அங்கு ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதல் சேதத்தை பார்வையிட்டார். இந்நகரில் மட்டும் ஏறக்குறைய 300 க்கும் அதிகமானார் ரஷ்ய படையினரால் டார்ச்சர் செய்யப்பட்டு கொலை செய்யபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த புச்சா நகரில்தான் உக்ரைன் மக்கள் பலர் கைகள் கட்டப்பட்டு சுட்ட நிலையில் பிணமாக கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
உக்ரைனின் புச்சா நகரில் நூற்றுக்கணக்கான பிணங்கள் சிதறி கிடப்பதாகவும், பல பிணங்கள் ஒரே இடத்தில் புதைக்கப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பலரது பின்னங்கைகள் கட்டப்பட்டு நெற்றியில் சுடப்பட்டு பிணமாக கிடந்தனர். குறிப்பாக ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மொத்தமாக புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா புதிய தாக்குதலை துவக்கி இருக்கிறது. துறைமுக நகரான ஓடேசாவில் ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கிறது. இங்கு பலத்த சப்தத்துடன் பெரும் குண்டு வெடித்தாதாகவும் தொடர்ந்து கரும்புகை கிளம்பி வான் அளவை தொட்டதாகவும் அங்குள்ள உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் ரஷ்ய போர் துவங்கியதில் இருந்து இரு படையினர் இடையே கடும் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தங்களின் ஆதரவை தெரிவித்து கூடுதல் ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கு லுகான்ஸ்க் ரஷ்யாவின் எம்.ஐ28என்ற ஹெலிகாப்டரை பிரிட்டன் ஏவுகணை தாக்கி வீழ்த்தியது.
உக்ரைனில் மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேட்டோ அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைன் கிழக்கு பகுதியை தாக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது. மேலும் 2 ஆயிரம் பேர் கொண்ட ராணுவ வீரர்களை அனுப்ப ரஷ்யா தயாராகி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் மீது நடத்திய போரில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிட்டவில்லை என்பதால் ரஷ்ய ராணுவ தளபதிகள், அதிபர் புடின் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான உளவுத்துறை தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. போரை நடத்த சில தளபதிகளே முன்மொழிந்ததாகவும், இதனை புடின் புறக்கணித்திருக்கலாமோ என்று தற்போது சிந்திப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால், மரியபோல் நகர் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என புடின் கூறியதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், அந்நகரில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கு உதவும் திட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக புடின் உறுதி அளித்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னேற்றமில்லை
ரஷ்யா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், தாங்கள் என்ன முன்மொழிகிறோம் என்பதை எழுத்துப்பூர்வமாக அளிப்பதாக உக்ரைன் கூறியுள்ளது மட்டுமே சாதகமாக விஷயம். தற்போது வரை அதனை எங்களால் பெற முடியவில்லை. மற்ற விஷயங்களை தற்போது எதுவும் கூற முடியாது. தற்போதைய நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
முன்னதாக நேற்று, இரண்டு வாரங்களுக்கு பின், மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புலில் அமைதி குழுவினர் மீண்டும் நேற்று பேச்சை துவக்கினர்.இக்குழுவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நண்பரும், தொழிலதிபருமான ரோமன் அப்ரமோவிச் இடம் பெற்றுள்ளார். அதிகாரப்பூர்வமாக குழுவில் இவர் இடம்பெறவில்லை என்றாலும், சில தொடர்புகளை ஏற்படுத்தி தருவார் என்ற அடிப்படையில், இருதரப்பும் இவருக்கு அனுமதி அளித்துள்ளன.
இந்த பேச்சு வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த சந்திப்புக்கு பின் ரஷ்ய ராணுவ துணை அமைச்சர் அலெக்சாண்டர் போபின் வெளியிட்டுள்ள அறிக்கை இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. அதன் விபரம்:சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கிலும் அமைதிப் பேச்சில் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹவ் நகரங்களில் தாக்குதல்களை குறைத்துக் கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்யாவுக்கு அஞ்சி பிற நாட்டவர்கள் எங்களுக்கு உதவுவதில் அஞ்ச வேண்டாம். மாஸ்கோவுக்கு பதிலடி கொடுத்திட தைரியமான ஆயுதங்களை வழங்குங்கள். அச்சம் சிலரை கட்டிப்போடுகிறது. ஆயுதங்கள் வரவில்லை என்பதால் உக்ரைனியர்கள் சாகக்கூடாது. என கூறியுள்ளார் செலன்ஸ்கி.
கடும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்தால் ரஷ்யா உக்ரைனுடன் உடனடி பேச்சு நடத்த வேண்டும். தாமதிக்காமல் அமைதியை நிலைநாட்ட பேச்சு மிக அவசியம். அமைதியை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே 33வது நாட்களாக போர் நீடிக்கும் வேளையில் உக்ரைனின் விவ் நகர் மீது ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதனால் விவ் நகர் மக்கள் அச்சத்தில் பதுங்கு குழிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
ரஷ்ய போர் நடந்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் அண்டை நாடானா போலந்து சென்றார். அங்கு அவர் போலந்து நாட்டில் அகதியாக வந்துள்ள உக்ரைன் மக்களை சந்தித்து கை குலுக்கி ஆறுதல் தெரிவித்தார். அம்மக்கள் இடையே பைடன் பேசியது உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது. ” உக்ரைனில் புடின் தவறு செய்துள்ளார். அவர் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். உக்ரைன் மக்களோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம். ” என கூறியிருப்பது மக்களுக்கு ஆறுதலையும், தெம்பையும் தந்துள்ளது. பைடன் பேச்சின்போது மக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.
ரஷ்ய ராணுவ ஜெனரல் ஜெனரல் விளாடிஸ்லாவ் யார்சோவ் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். மேலும் அவர் வீட்டு சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டது. உக்ரைன் மீதான போரை நேர்த்தியாக கொண்டு செல்லாமல் பின்னடவை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் போரில் இது வரை 7 ரஷ்ய ராணுவ ஜெனரல்கள் பலியாகி இருப்பதாக லண்டன் செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் துவங்கிய நாள் முதல் 134 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 184 பேர் காயமுற்றதாகவும் இதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உக்ரைன் சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.
“உக்ரைன் மீது, ‘பாஸ்பரஸ்’ ரசாயன குண்டுகளை வீசி, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்,” என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய விரும்பிய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. அதோடு, உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று கூறியதாவது: உக்ரைன் மீது, ரஷ்ய படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்த துவங்கி உள்ளனர். மிகவும் அபாயகரமான பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், ஏராளமான குழந்தைகளும், இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.உக்ரைனுக்கு, உலக மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மக்கள் அனைவரும் பொதுவெளியில் இறங்க வேண்டும்; சாலைகளில் திரண்டு உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
‘டப் ‘ கொடுக்கும் உக்ரைன்
உக்ரைனின் அருகில் உள்ள போலந்து நாட்டில் அமெரிக்கா தன் படைகளை இறக்கி உள்ளது. இங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் கூடுதல் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா போரை துவக்கி 4 வாரங்களுக்கு மேல் ஆகியும் எதிர்பார்த்த வெற்றி கிட்டாததால் அந்நாட்டு அதிபர் புடின் கவலை அடைந்துள்ளார். ரஷ்ய படையை, இத்தனை நாள் சமாளித்து களத்தில் நிற்கிறது என்றால் உக்ரைனுக்கு இது பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. ரஷ்ய வீரர்கள் பலரை இழந்துள்ளதால் போரை நிறுத்தலாமா என்றும் யோசிக்க துவங்கி இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 3 நாளில் போர் நிறுத்த அறிவிப்பு வரலாம் என கூறப்படுகிறது.
தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என ரஷ்யா கூறியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடன் எல்லைப் பிரச்னை தீவிரமடைந்ததை தொடர்ந்து, அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் அணுஆயுதங்களை பயன்படுத்துவதை ரஷ்யா விரும்பவில்லை. உள்நாட்டு பாதுகாப்புக்கு கொள்கை உள்ளது. அது வெளிப்படையானது. அனைவரும் தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில், ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணுஆயுதங்களை பயன்படுத்துவோம் எனக்கூறினார்.
இது தொடர்பாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ரஷ்யாவின் அறிவிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அணுசக்தி வைத்துள்ள நாடு செயல்படும் விதம் இதுவல்ல என்றார்.
திணறல்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில், தலைநகர் கீவ் நகரின் புறநகர் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. அதே நேரத்தில் துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது.
தலைநகர் கீவ் நகரை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த அதன் புறநகர் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.இதையடுத்து, கீவ் நகருக்குள் வருவதற்கான முக்கிய நெடுஞ்சாலை, உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
அதே நேரத்தில், கீவ் நகரை நோக்கி, ஏவுகணைகள் மற்றும் பீரங்கி வாயிலாக ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.இதற்கிடையே, தெற்கே உள்ள முக்கிய துறைமுக நகரான மரியுபோலைப் பிடிக்க ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது.இதற்காக ரஷ்யா வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இங்கு மின்சாரம், குடிநீர், உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், நகரை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.இந்தப் போரால், உக்ரைனில் இருந்து ஒரு கோடி மக்கள் வெளியேறிஉள்ளதாக கூறப்படுகிறது. அதில், 35 லட்சம் பேர் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 65 லட்சம் பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
மறுப்பு
இதுவரை, 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக, ஐ.நா., கூறுகிறது. ஆனால், உண்மையான பலி எண்ணிக்கை பல மடங்கு இருக்கும் என கூறப்படுகிறது.இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ‘டிவி’ வாயிலாக உரையாற்றி, மக்களுக்கு உற்சாகமூட்டி வருகிறார்.
இதற்கிடையே, போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் பேச்சு நடத்தி வருகின்றன. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சரணடைய வேண்டும் என்ற ரஷ்யா வின் கோரிக்கையை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது.
ரஷ்யாவின் தாக்குதல் உக்ரைனில் உச்சமடைந்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. சரண் அடைந்தால் விட்ருவோம் என ரஷ்யா எச்சரித்தும் உக்ரைன் பின்வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் அணு ஆயுதம் மற்றும் அம்மோனியா ஆலைகள் மீது தாக்குதல் நடந்திருப்பதால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. 26வது நாளாக இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஷ்யா செய்வது யுத்தம் அல்ல, பயங்கரவாதம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புடினை நேருக்கு நேர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனில் போர் துவங்கிய நாள் முதல் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக ஐ.நா., வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் மட்டும் 60 லட்சம் பேர் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யா அமைதி பேச்சு நடத்த கால தாமதமின்றி வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மீண்டும் இன்று 4 வது முறையாக வலியுறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தையையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ரஷ்யா பொருட்படுத்தவில்லை. அமைதிக்கு வழி ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் தொடர் தாக்குதல் நடந்து வரும் நிலையில், லிவிவ் நகரில் பல ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதில், ராணுவ விமானங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் இடம் மற்றும் பஸ் ரிப்பேர் செய்யும் இடம் ஆகியவை சேதமடைந்துள்ளது. இதனால், அந்த இடங்கள் உடனடியாக மூடப்பட்டன. இதில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை.
அதேநேரத்தில் உக்ரைன் விமானப்படை வெளியிட்ட அறிக்கையில், லிவிவ் நகர் மீது கருங்கடல் பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அதில் 2 ஏவுகணைகளை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
தியேட்டர் மீது தாக்குதல்
உக்ரைன் மரியூபோல் நகரத்தில் உள்ள தியேட்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆயிரக்கணக்கான குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரஷ்ய தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சம் புகுந்த மக்கள் பலர் காயமுற்றனர்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், போர்க்குற்றவாளி எனவும், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்தை, குடியரசு கட்சியின் லிண்ட்சே கிரஹாம் கொண்டு வந்தார்.. இது குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஒரு மித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.
உக்ரைனில் ரசாயன தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக, நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச போர் சட்டத்தை ரஷ்யா மீறினால், அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. நேட்டோ அமைப்பு இதுகுறித்து விழிப்புடன் இருப்பதாக, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
புதிய சேட்டிலைட் படம் வெளியீடு
கியூ: உக்ரைன் மொசூன் நகரில் ரஷ்ய படை தாக்குதலில் குடியிருப்பு பகுதிகள், பெரும் கட்டடங்கள் எரிந்து சாம்பலாகி கிடக்கிறது. இது தொடர்பான சேட்டிலைட் படம் வெளியாகி உள்ளது. ஆள் அரவமின்றி அமைதிக்காடாக காட்சி அளிக்கிறது.
உக்ரைனில் நடந்து வரும் தாக்குதல் 20 நாட்களை ( மார்ச்.15) தொட்டுள்ளது. இருப்பினும் இன்னும் ரஷ்யாவால் உக்ரைனை தன் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்நிலையில் உக்ரைன் படையை சமாளிக்க ரஷ்யா , சீன உதவியை கேட்டதாக அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் சீன தூதரகம் இதனை மறுத்துள்ளது. உக்ரைன் தாக்குதல் 19 வது நாளை ( மார்ச்.14) கடந்து சென்று கொண்டிருக்கிறது.
உக்ரைன் தாக்குதல் 18 வது நாளை ( மார்ச்.13) கடந்து சென்று கொண்டிருக்கிறது. ரஷ்ய படைக்கு உக்ரைன் நல்லவே டப் கொடுத்து வருகிறது. கியூவ் நகரை ரஷ்ய படை நெருங்கி உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் எதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், முடிவுக்கு வரும் வரை எதிர்த்து நிற்போம். இவ்வாறு உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அதிபர் மத்தியஸ்தராக இருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்
உக்ரைனில் மரியூபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ராணுவ தாக்குதல் நடத்தி போர் குற்றம் புரிந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதிக்கு தடை எதுவும் விதிக்காமல் இருந்தன. இதனால் எரிபொருள் ஏற்றுமதி வாயிலாக ரஷ்யா அதிக வருவாயை ஈட்டி வருகிறது.
பெருமைபட வேண்டும்” – புடின்
கீவ்: ராணுவ வீரர்களின் குடும்ப பெண்கள் அனைவரும் தியாகத்தை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது:
நமது ராணுவ வீரர்கள் பெருமை தரும் பணியை மேற்கொண்டுள்ளனர். போரில் ஈடுபட்டுள்ள வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர்களின் அன்புக்குரியவர்களான மனைவிகள், சகோதாரிகள் ,நண்பர்கள் அனைவரது உணர்வையும் நான் அறிந்துள்ளேன். நீங்கள் யாரும் கவலை கொள்ளாமல் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக எண்ணி உறவுக்காரர்களும் பெருமை கொள்ள வேண்டும். போரில் யாரும் கட்டாய ஈடுபடுத்த மாட்டார்கள். இவ்வாறு புடின் கூறியுள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா 13வது நாளாக (மார்ச்.8 ) போர் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நாடு சரண் அடையும் வரை விட மாட்டோம் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
ரஷ்யா போர் நிறுத்தம் செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. .
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது நேற்று (மார்ச் 06) தாக்குதலை மீண்டும் துவக்கியுள்ளது. உக்ரைனின் எல்லைப் பகுதிகளை ரஷ்யப் படைகள் கைப்பற்றின. உக்ரைனில் பொதுமக்கள் 350 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மனித பலி குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த வேளையில் ரஷ்யா மக்களின் நலன் கருதி இந்த போர் நிறுத்தம் முடிவை எடுத்திருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த நிறுத்தம் 2 முக்கிய நகரங்களில் அமலில் இருக்கும் கிழக்கு உக்ரைனில் போர்நிறுத்தம் இல்லை என்றும் தெரிகிறது.
உக்ரைனின் ஷபோரிஷியா என்ற நகரில் உள்ள அணுமின் நிலையம் அருகே ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அணு உலை காப்பாற்றப்பட்டதாக உக்ரைன் அரசு தரப்பில் கூறப்படுகிறது. அணு உலை மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
‛ரஷ்ய அதிபர் புடின் என்னுடன் நேரடியாக அமர்ந்து பேசுவது மட்டுமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஒரே வழி’ என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ஜெலன்ஸ்கி மேலும் கூறியதாவது: மேற்கத்திய நாடுகள் எங்களுக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை அதிகரிக்க வேண்டும். வான் வெளியை மூட உங்களுக்கு அதிகாரம் இல்லையெனில் எங்களுக்கு விமானங்களை அளியுங்கள். இல்லையெனில் நாளை இதர ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா படையெடுக்கும்.
ரஷ்யாவை தாக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை. எங்களிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும். எங்கள் நிலத்தை விட்டு வெளியேறுங்கள். ரஷ்ய அதிபர் புடின் என்னுடன் நேரடியாக அமர்ந்து பேசினால் மட்டுமே இந்த போர் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர் குண்டு மழை
உக்ரைன் தலைநகர் கியூவில் தொடர் குண்டு மழையை ரஷ்யா பொழிந்து வருகிறது. இங்கு பல கட்டடங்கள் தரைமட்டமாகின. தொடர்ந்து பலத்த குண்டு சப்தம் கேட்டு வருவதாக பி.பி.சி., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
உக்ரைனில் நடந்து வரும் தாக்குதலில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கெர்சான் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாக அம்மாகாண கவர்னர் கூறியுள்ளார்.
கடுமையான தாக்குதல்
உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு காலை முதல் வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ அகாடமி, மருத்துவமனைகள் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றன.
இந்திய மாணவர் பலி
உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவன் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த மாணவர் கர்நாடக மாநிலம் ஹவேரி சாலகிரி பகுதியை சேர்ந்த நவீன் சேகரப்பா என்பது தெரியவந்துள்ளது. இவர் அங்குள்ள தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகவும் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்து ரயில் நிலையம் சென்றுக்கொண்டிருந்தபோது ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா., வலியுறுத்தல்
உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா., சிறப்பு கூட்டத்தில் பேசிய அமைப்பின் பொதுசெயலர் அன்டோனியா கட்டர்ஸ் வலியுறுத்தி உள்ளார். படைகள் திரும்ப பெறப்பட வேண்டும். தலைவர்கள் அமைதி பேச்சு முடிவுக்கு வர வேண்டும். மக்கள் காக்கப்பட வேண்டும். சர்வதேச எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது துப்பாக்கிகள் பேசி கொண்டிருப்பது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார். எந்தவொரு விஷயத்திற்கும் போர் ஒரு தீர்வாக முடியாது. இது உயிர்ச்சேதமாகத்தான் இருக்கும். மனிதர்களை பாதிப்பதாகத்தான் இருக்கும். பேச்சு வார்த்தை வரவேற்கப்பட வேண்டியது. பேச்சு வார்த்தைக்கு ஐ.நா., துணை நிற்கும் என்றார்.
எச்சரிக்கை
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்ய படையினர் எங்கள் நாட்டில் இருந்து வெளியேறுங்கள். தங்களின் உயிரை காப்பாற்ற திரும்பி செல்லுங்கள். தாக்குதலை நிறுத்தா விட்டால் கடும் விளைவை ரஷ்யா சந்திக்கும். மேலும் உக்ரைனில் உள்ள ராணுவ அனுபவம் உள்ள கைதிகளை விடுதலை செய்து போரில் ஈடுபடுத்துவோம். இவ்வாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
அழிப்பு
உக்ரைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகின் மிக பெரிய சரக்கு விமானம் ரஷ்ய படையால் குண்டு வீசி அழிக்கப்பட்டது . அண்டானோவ் அன் 225 மிரியா என்ற இந்த விமானம் மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ஏறக்குறைய 22 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என தெரிகிறது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நீடிக்கும் நிலையில் ரஷ்ய படைகள் முன்னேறி கார்கிவ் நகரை கைப்பற்றியிருந்தன. இந்நிலையில் உக்ரைன் படைகள் கடுமையாக போரிட்டு கார்கிவ் நகரை ரஷ்ய படைகளிடமிருந்து மீட்டியுள்ளதாக கார்கிவ் கவர்னர் அறிவித்துள்ளார்.
:உக்ரைனை ஒட்டிய நாடுகளின் எல்லையில் 15 கி.மீட்டர் தூரத்திற்கு உக்ரைன் மக்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு வர துவங்கி உள்ளனர். அங்கிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு செல்ல வாகனங்கள் ஏதும் வராதா என கவலையுடன் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். பெலாரஸ், ஹங்கேரி, போலந்து, ரோமானியா நாடுகளின் எல்லலையில் மக்கள் சாரை, சாரையாக 2 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்துள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய ஜெட் விமானங்கள் 14 சுட்டு வீழ்த்தி உள்ளோம். இது வரை 3, 500 வீரர்களை கொன்று விட்டோம் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் தங்களின் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார். அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு கங்கா ஆப்பரேஷன் என பெயரிட்டு விமானங்களை அனுப்பி வைத்தது. உக்ரைனின் 2வது கார்கிவ் நகரை கைப்பற்றியது ரஷ்யா.
கூகுள் நிறுவனம் ரஷ்ய நிறுவனங்கள், தனிநபர்கள் விளம்பரம் செய்யும் முறைக்கு தடை விதித்துள்ளது. மேலும் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, ஸ்லோவேனியா ஆகிய 4 நாடுகளின் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே, கீவ் நகரை தாக்கிய ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. மேலும் ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், போரில் இதுவரை 3,500 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாகவும், 14 போர் விமானங்கள், 8 ஹெலிகாபடர்கள், 102 போர் டாங்கிகள் 836 கவச வாகனஙகள்,15 பீரங்கிகளையும் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; போர் சூழல் பெரும் பாதிப்பான சூழல் இருக்கிறது. எனவே இந்தியர்கள் யாரும் அரசு தரப்பு வழிகாட்டுதல் இல்லாமல் வெளியே வர வேண்டாம். என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் கியூ நகரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் ராணுவ தளங்கள் நகரங்களை வான்வழி தாக்குதல் வாயிலாக அழித்து வரும் ரஷ்ய படையினர் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர். இந்நிலையில் ”உக்ரைனுடன் பேச்சு நடத்த குழுவை அனுப்ப தயார்” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா நேற்று இரண்டாவது நாளாக தாக்குதல்களை தொடர்ந்தது. தலைநகர் கீவ்வில் அதிகாலை முதலே குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்க துவங்கியதாக உக்ரைன் மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.’பொது மக்கள் வெளியே வரவேண்டாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் முழுதும் உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். கீவ் நகரை சுற்றி ரஷ்ய உளவாளிகளும் நாச வேலைகளில் ஈடுபடுவோரும் அதிக எண்ணிக்கையில் தென்படுவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
‘நகரங்களை அழிப்பது எங்கள் நோக்கமல்ல’ என ரஷ்யா தெரிவித்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேற்று ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயற்சி செய்த ரஷ்ய படையினருடன் இவான்கிவ் என்ற இடத்தில் உக்ரைன் ராணுவத்தினர் நேற்று கடும் சண்டையில் ஈடுபட்டனர். இந்த இடம் கீவ் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனாலும் ரஷ்ய படைகள் கீவ் நகரை நெருங்கிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கிழக்கு ஐரோப்பிய எல்லையில் ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் படை தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கு வலுசேர்க்க கூடுதலான அமெரிக்க படையினர் ஜெர்மனியில் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
போர் நாளை உங்கள் கதவுகளையும் தட்டும்
ஆனாலும் உலக நாடுகளின் மவுனம் உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கியை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அவர் நேற்று கூறியதாவது:
ரஷ்ய படையெடுப்பில் 137 அப்பாவி மக்களும் ராணுவத்தினரும் வீர மரணம் அடைந்துள்ளனர். ராணுவ தளங்களை மட்டுமே அழிப்பதாக ரஷ்யா கூறுகிறது. ஆனால் மக்களை கொன்று குவிக்கும் அத்துமீறலில் ரஷ்ய படைகள் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. உலக நாடுகள் எங்களுக்கு இப்போது உதவாமல் போனால் போர் நாளை உங்கள் நாட்டு கதவுகளையும் தட்டும். எங்களுக்கு உதவுவதாக கூறிய பெரிய நாடுகள் இப்போது எங்களை தனிமையில் விட்டு விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் கீவ் புறநகர் பகுதியில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ள ரஷ்ய ராணுவம் இனி மற்ற நாடுகளில் இருந்து கீவுக்கு விமானங்கள் வர முடியாது என தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறுகையில் ‘ரஷ்ய போர் விமானங்கள் சிலவற்றை சுட்டு வீழ்த்தி விட்டோம். 800க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர்’ என தெரிவித்துள்ளன. இதற்கிடையே ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் நேற்று கூறியதாவது: உக்ரைன் மக்களை ராணுவம் மற்றும் சர்வாதிகார பிடியில் இருந்து மீட்கவே அதிபர் விளாடிமிர் புடின் இந்த படையெடுப்பை முன்னெடுத்தார். உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்தால் பேச்சு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
‘ரஷ்யாவுடன் பேச்சு நடத்த தயார்’ என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில் அதற்கு ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இருந்து பதில் வந்துள்ளது.இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று கூறுகையில் ”பெலாரஸ் தலைநகரான மின்ஸ்கில் உக்ரைனுடன் பேச்சு நடத்த உயர்நிலைக் குழுவை அனுப்ப அதிபர் புடின் தயாராக உள்ளார்” என தெரிவித்தார்.
1000 பேர் பலி
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலால் பொதுமக்கள் 137 பேர், ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் பதிலடியில் இங்கு 800க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இதன்படி போரில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் நிலைப்பாடு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டியது அவசியம். அத்தகைய நடவடிக்கைகளை நாம் எடுக்கா விட்டால் அதன் அதிபர் விளாடிமிர் புடினுக்கு தைரியம் வந்துவிடும். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா ‘நேட்டோ’ நாடுகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்தால் அமெரிக்கா அதில் தலையிடும். ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடத்த எந்த திட்டமும் இல்லை.ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளும் இதில் குற்றவாளிகள் தான். உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட அமெரிக்க வீரர்கள் அனுப்பப்படவில்லை. நேட்டோ நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கவே அனுப்பப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.