சயன்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் என்ற இதழில் சமீபத்தில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றின் முடிவுகளில் மீன்களால் எண்ண முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிச்லிட்ஸ் மற்றும் ஸ்டிங்க்ரேஸ் போன்ற மீன்களால் ஐந்து வரை கூட்டவோ கழிக்கவோ முடியும் என்று அந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு மேஜையில் இருக்கும் நாணயங்களை எண்ணுவதற்கு நமக்கு ஒன்றும் மிகப்பெரிய கணித சூத்திரங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை. அப்படித் தான் இந்த மீன்களுக்கும். ஒரு சிறிய கூட்டத்தைப் பார்த்ததும் அதில் தோராயமாக எத்தனை மீன்கள் இருக்கின்றன என்பதை இந்த இரண்டு வகையான மீன்களால் உடனுக்குடன் எண்ணி விட இயலும் என்று கூறுகின்றனர் இந்த ஆராய்ச்சிய்க் கட்டுரையை வெளியிட்ட ஆய்வாளர்கள்.
பான் பல்கலைக்கழகத்தில் உள்ள விலங்கியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர். வேரா ஸ்க்லூசெல் தலைமையிலான ஆய்வுக் குழு இப்போது இரண்டு இனங்களால் கணக்கிட முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
தேனீக்களின் கணித திறன்களை சோதிக்க மற்ற ஆராய்ச்சி குழுக்கள் ஏற்கனவே வெற்றிகரமாக பயன்படுத்திய ஒரு முறையை ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்விலும் பயன்படுத்தியுள்ளனர். நான்கு சதுக்கங்களை இதற்காக பயன்படுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். நான்கும் நீல நிறத்தில் இருந்தால் கூட்டல். மஞ்சள் நிறத்தில் இருந்தால் கழித்தல். தற்போது நான்கு சதுரங்களை நீல நிறத்தில் காட்டிய பிறகு அதனுடன் ஒன்று சேர்க்கப்பட்டால் என்ன நிகழும், கழித்தால் என்ன நிகழும் என்பதை சோதித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். உதாரணத்திற்கு நீல நிறத்தில் காட்டப்பட்ட பிறகு ஐந்து மீன்களை கொண்ட சதுக்கம் ஒன்றையும் மூன்று மீன்களைக் கொண்ட சதுக்கமும் மீன்கள் முன்பு வைக்கப்படுகிறது. சரியான பதிலை அதாவது ஐந்தை நோக்கி மீன்கள் வந்தால் அவைகளுக்கு உணவு கொடுத்து ஊக்குவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். காலப்போக்கில், நீல நிறத்தை ஆரம்பத்தில் காட்டப்பட்ட தொகையில் ஒன்று கூட்டுவதற்காகவும், மஞ்சளை கழித்தழுடனும் இணைக்க கற்றுக்கொண்டன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் மீன் இந்த அறிவை புதிய பணிகளுக்கு பயன்படுத்த முடியுமா? அவர்கள் உண்மையில் வண்ணங்களுக்குப் பின்னால் உள்ள கணித விதியை உள்வாங்கிக் கொண்டனவா? என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் கீழ் கண்டவாறு பதில் அளிக்கின்றனர். இதைச் சரிபார்க்க, பயிற்சியின் போது சில கணக்கீடுகளை நாங்கள் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டோம். “அதாவது, 3+1 மற்றும் 3-1. கற்றல் கட்டத்திற்குப் பிறகு, விலங்குகள் இந்த இரண்டு பணிகளையும் முதல் முறையாகப் பார்த்தன. ஆனால் அந்த சோதனைகளில் கூட, அவை பெரும்பாலும் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்தன என்று கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.