லக்னோ: லக்னோ ரயில் நிலையம் அருகே 5 வெடிகுண்டு போன்ற பொருட்கள் சிக்கியதால், உத்தரபிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த வொய்தாபாத் ரயில் நிலையத்திற்குப் பின்னால் ஐந்து வெடிகுண்டுகள் போன்ற பொருட்கள் கிடப்பதை, அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேர் பார்த்தனர். அந்த வெடிபொருளில் இருந்து ‘டிக்டிக்’ சத்தம் கேட்டதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 112 என்ற தொலைபேசி எண்ணுக்கு போலீசை தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு எஸ்பி அனுராக் வாட்ஸ் தலைமையிலான குழுவினர் வந்தனர். அங்கிருந்த, வெடிகுண்டுகள் போன்ற 5 மர்ம பொருட்களை கைப்பற்றினர். இதுகுறித்து எஸ்பி அனுராக் வாட்ஸ் கூறுகையில், ‘வொய்தாபாத் ரயில் நிலையம் அருகே வெடிகுண்டுகள் போன்ற 5 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் டைமர் இருந்தது. டிக்டிக் சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். லக்னோவில் இருந்து வெடிகுண்டு செயலிழப்பு படை வரவழைக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்களை அவர்கள் செயலிழக்கச் செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ரயில்களின் இயக்கம் தொடர்கிறது. எவ்வித தடையும் இல்லை. தலைநகர் லக்னோ அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.