நான் ஒருவரை காதலிக்கிறேன். ஆறு ஆண்டுகளாக நன்றாக சென்றுகொண்டிருந்த எங்கள் காதல், இப்போது மதுவால் பிரிந்துவிடுமோ என்று எண்ணும் அளவுக்கு, அவரது குடிப்பழக்கத்தால் எங்களுக்கு இடைவே இடைவெளி பெருகிவருகிறது.
நான் கல்லூரியில் படித்தபோது, அவர் அப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்திருந்தார். இருவரும் ஒரே ஏரியா. அவர்தான் முதலில் காதலைச் சொன்னார். நான் ஒரு வருடம் அதை ஏற்கவில்லை. ஆனாலும் அவர் தன் காதலில் உறுதியுடன் இருந்து, இன்னும் வருடங்கள் ஆனாலும் எனக்காகக் காத்திருப்பதாகச் சொல்ல, ஒரு கட்டத்தில் எனக்கும் அவர் மேல் காதல் வந்துவிட்டது.
காதலிக்க ஆரம்பித்த போது, என் மீது மிகவும் அன்பாக இருந்தார். இந்த உலகத்தில் அவரின் அன்புக்கு இணையில்லை என்று நான் நினைக்கும் அளவுக்கு என் மீது காதல் பொழிந்தார். என்னை மிகவும் பாதுகாப்பாவும், அக்கறையாவும் பார்த்துக்கொண்டார். இன்னொரு பக்கம், என் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது, என் விருப்பங்களுக்கு குறுக்கே நிற்காமல் இருப்பது என எனக்கான மரியாதையையும் உறுதிசெய்தார்.
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு நான் ஒரு வேலையில் சேர்ந்துவிட்டேன். அவர் வேறு அலுவலகம் மாறி, இன்னும் உயர் பொறுப்பு, கூடுதல் சம்பளம் என்று இருக்கிறார். கூடவே, புதிய நண்பர்கள் அவருக்குக் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வீக் எண்டில் மது குடிக்கும் வழக்கம் உடையவர்கள். அவர்களோடு சேர்ந்து இவரும் மது குடிக்க ஆரம்பித்தார். அது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், மதுப்பழக்கம் இல்லாத ஒருவரைத்தான் நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை ஒரு முடிவாகவே வைத்திருந்தேன். காரணம், அப்பா, சித்தப்பா என என் வீட்டு ஆண்களின் மதுப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், இழப்புகளை கண்கொண்டு பார்த்து வளர்ந்தவள் நான். எனவே, திருமணம் என்று வரும்போது, எனக்குக் கணவராக வருபவர் குடிப்பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம், நிபந்தனை, பிரார்த்தனை என எல்லாமுமாக இருந்தது. இதை நான் என் காதலரிடமும் முன்னர் சொல்லியிருக்கிறேன்.
இப்போது, அவரது குடிப்பழக்கம் குறித்து கடந்த ஒரு வருடமாக எனக்கும் அவருக்கும் பல சண்டைகள். அந்த சண்டைகளில் எங்கள் காதல் குறைந்துகொண்டே வருகிறதோ என்று தோணுகிறது. இப்போது அவர் முன்போல அன்பாக இருப்பதில்லை, என்னுடன் முன்போல நேரம் செலவழிப்பதில்லை, முன்போல என்னிடம் எதையும் பகிர்ந்துகொள்வதில்லை. சொல்லப்போனால், தகவல் பரிமாற்றம் என்ற அளவிலேயே எங்கள் உரையாடல்கள் சுருங்கி வருகின்றன. முன்னர் என் மீது அத்துனை அன்பாக இருந்தவர். இந்த மதுவுக்காக என்னையே விட்டு விலகும் அளவுக்கா போதை ஒருவரை மாற்றும் என்று வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
எனக்குக் குடிப்பழக்கம் பிடிக்காது என்று தெரிந்தும், இப்படி நீங்கள் செய்வது நியாயமா?’ என்று கேட்டால், ‘நான் ஏற்கெனவே அவ்வப்போது குடிப்பேன். உன்னிடம் அதை மறைத்துவிட்டேன். இப்போது வேலையில் எனக்கு நிறைய ஸ்ட்ரெஸ். ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் வீக் எண்டில் குடிக்கிறார்கள், நானும் குடிக்கிறேன். கூடவே, என் அம்மாவின் மரணமும் என்னை அந்த மனநிலையில் தள்ளியுள்ளது. நீ ஏதோ என்னைக் குற்றவாளிபோல விசாரித்துக்கொண்டே இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. குடிக்காத ஆணை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்றால், அப்படி யாராவது கிடைத்தால், தேடி மணந்துகொள்’ என்கிறார்.
நான் அவரை இப்போதும் மிகவும் காதலிக்கிறேன். நானும் அவரும் நாளை கணவன், மனைவியாக வாழ வேண்டிய வாழ்க்கைக்கான கனவுகள், இலக்குகளுடன் அதை நோக்கிக் காத்திருக்கிறேன். ஆனால், அவரது குடிப்பழக்கத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனக்காக, என் அன்புக்காக, வேண்டுகோளுக்காக, கெஞ்சலுக்காக, அழுகைக்காககூட அவர் குடியை விட மறுக்கிறார் என்பது எனக்கு ஆச்சர்யமாகவும், ஏமாற்றமாகவும், வலியாகவும் உள்ளது.
அவரை மாற்ற முடியுமா? இந்தக் காதல் கல்யாணத்தில் முடியுமா?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..! தோழிகளே…
தோழிகளே… இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். [email protected] என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.