CSK vs SRH: வானம் தொட்டுப் போனா… தொடர்ந்து 4 தோல்விகள்; 2020-ன் ரிப்பீட் மோடில் சென்னை?

ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த முறை 33% பார்வையாளர்கள் குறைவாக இருக்கிறார்கள் என ஆரம்பக்கட்ட முடிவுகள் சொல்கின்றன. பத்து அணிகள், குறைவான காலத்துக்குள்ளேயே அடுத்த ஐபிஎல் தொடர்; அதிகமான லீக் போட்டிகள் என நிறைய காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டாலும், கண் எதிரே பளீரென தெரியும் காரணம் சென்னை, மும்பை அணிகளின் தொடர் தோல்விகள்தான்.

மற்ற அணிகளைவிட எப்போதும் சென்னை போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் அதிகம். ரசிகர்கள் எண்ணிகையிலும் சென்னையும், மும்பையும்தான் டாப்பர்கள். ஆனாலும் இப்படி இரண்டு அணிகளும் போட்டி போட்டிக்கொண்டு தோற்றால் என்னதான் செய்வது. அனைத்து ரேட்டிங்குகளும் அதலபாதாளத்துக்குச் சென்றிருக்கிறது. போதாக்குறைக்கு சென்னை கேவலமாக பேட் செய்தால், மும்பை அதைவிடவும் கேவலமாக பேட் செய்கிறது.

CSK vs SRH

இன்றைய சென்னை வெர்சஸ் சன் ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியினைப் பார்ப்போம். இரண்டு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. ஒன்று மூன்று முறை தோற்ற அணி. இன்னொன்று இரண்டு முறை தோற்ற அணி. சன்ரைசர்ஸ் தோற்றால் யாரும் பெரிதாக கவலைப்படப்போவதில்லை என்பதால், சென்னையைப் பற்றித்தான் எல்லோருடைய பேச்சும் இருந்தது. ‘இந்த வருடமாவது மழை பொழியுமா, சென்னை மக்கள் தூக்கம்’ என்கிற மோடில்தான் சென்னை அணியின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தார்கள். அடி வாங்கவே அளவெடுத்து செய்தது போல் இருக்கும் சன்ரைசர்ஸ் அணியை வெல்வதுதான் மிகவும் சுலபம் என்பதால், மஞ்சள் படையும் ‘ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்’ என பிளெக்ஸ் எல்லாம் அடிக்கத் தயாராக இருந்தார்கள். டாஸ் வென்ற ஐதராபாத் அணி சேஸிங் தேர்வு செய்தது. மார்க்கோ ஜேன்சனும், சஷாங் சிங்கும் ஐதராபாத் அணிக்கு முதல்முறையாகத் தேர்வானார்கள். சென்னை அணியில் மஹீஸ் தீக்‌ஷனா முதன்முதலாக இடம்பிடித்தார்.

சன்ரைசர்ஸ் பிளேயிங் XI: அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, மர்க்ரம், நிகோலஸ் பூரன்,சஷாங் சிங், வாசிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்க்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், நடராஜன்

சென்னை சூப்பர் கிங்ஸ் XI : கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி , அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் தூபே, தோனி, பிராவோ, மஹீஸ் தீக்‌ஷனா, கிறிஸ் ஜோர்டான், முகேஷ் சௌத்ரி

உத்தப்பாவும், கெய்க்வாட்டும் ஓப்பனிங் இறங்கினார்கள். புவியின் முதல் ஓவரில் பெரிய சேதாரமில்லாமல் எட்டு ரன்கள் சேகரித்தார் ராபின் உத்தப்பா. மார்க்கோ ஜேன்சன் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் ருத்து கெய்க்வாட். அப்பாடா சனி ஒழிந்தது; மூன்று அடிகள் வாங்கிவிட்ட ருத்துராஜ் திருப்பி அடிக்க ஆரம்பித்துவிட்டார். இனி எல்லாம் வெற்றியே, வெற்றிவேல், வீரவேல் என வேலும் கம்புமாக தட்டில் பாப்கார்னுடன் உற்சாகமாக ரெடியானார்கள் சென்னை ரசிகர்கள். “இன்னுமா பாப்கார்ன் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என கிச்சனுக்குப் போய்விட்டு வந்துபார்த்தால் சென்னைப் பையன் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார் உத்தப்பா. “என்ன தொண்ட லேசா கவ்வுது” என பாப்கார்னை எடுக்காமலேயே திரும்பி வந்து டிவி பக்கம் கவனத்தை செலுத்தினர் சென்னையன்ஸ்.

CSK vs SRH

தமிழக வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடுவதைவிட மற்ற அணிகளுக்கு ஆடுவதுதான் ஐபிஎல் வழக்கம் என்பதால், சுந்தர்தானே போகட்டும் என நினைத்துவிட்டு ஆட்டத்தைக் கவனித்தனர். ருத்து இன்னுமொரு பவுண்டரி அடித்து ஆறுதல்படுத்தினார். யானை பசிக்கு சோளப்பொறியா என்பதுபோல் ‘வீ வான்ட் மோர்’ என்றார்கள். பவர்பிளேவின் கடைசி ஓவரை வீச வந்தார் மற்றுமொரு தமிழக வீரரான நடராஜன். பந்தை ஃபிளிக் செய்ய முயன்ற ருத்துவின் பேட்டுக்கும், பேடுக்கும் இடையே சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது நடராஜன் வீசிய பந்து. ‘ஏம்பா மூணு போட்டில அடி வாங்கிட்டு திருப்பி எம்ஜிஆர் மாதிரி ருத்து திருப்பி அடிப்பார்னு சொன்னாங்க. இவர் என்ன நாலாவது போட்டியிலும் அடிக்கலயே… இந்த வருஷமும் போச்சா’ என நம்பிக்கையை இழந்து சோக மோடுக்குச் சென்றார்கள் ரசிகர்கள். ‘பாப்கார்ன் ரெடி’ என்றொரு கிச்சனில் இருந்து குரல் கேட்டது.

மொயின் அலியும், அம்பதி ராயுடுவும் கொஞ்ச நேரம் சன்ரைசர்ஸ் அணியை சமாளித்து ஆடினர். நட்டு வீசிய பந்தை ஸ்லாக் ஷாட் அடிக்க முயன்ற மொயின் அலி, தேர்ட் மேனில் நின்றுகொண்டிருந்த மாலிக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகியிருப்பார். ஆனால், மாலிக் அதை மிஸ் செய்துவிட்டார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக அடுத்த ஓவரில் மாலிக் வீசிய 146 கிமீ வேகத்தில் வீசிய பந்தை புல் ஷாட் அடித்து சிக்ஸருக்கு விளாசினார் மொயின் அலி. அடுத்த பந்தில் தேர்ட் மேன் பக்கம் ஒரு பவுண்டரி. அந்த ஓவரின் கடைசி பந்தை மாலிக் வீசிய வேகம் 152 கிமீ.

இந்த இன்னின்ஸில் மாலிக் தான் வீசிய இரண்டாவது ஓவரில் 153.1 கிமீ வேகத்தில் பந்து வீசினார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஓர் இந்தியர் வீசிய அதி வேகமான பந்து இதுதான்.

மொயின் அலி, அம்பதி ராயுடு | CSK vs SRH

பாப்கார்ன் ஹாலுக்கு வருவதற்கும், வாஷிங்டன் சுந்தர் தன் கடைசி ஓவரை வீசுவதற்கும் நேரம் சரியாக இருந்தது. மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அம்பதி ராயுடு. அடுத்து மார்க்ரம் வீசிய ஓவரில் லாங் ஆன் பக்கம் ஒரு சிக்ஸ் அடித்து, அடுத்த பந்தில் அதே லாங் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் அலி. அம்பதியும் அலியும் வேறு வழியில்லாமல் ரன் ரேட்டை அதிகரிக்க, அடித்து அவுட்டாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா உள்ளே நுழைய, ஷார்ட் தேர்ட் மேனிடம் சுலபமான கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஷிவம் தூபே.

நான்கு ஓவர்களே மீதமிருக்கும் நிலையில் அணியைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் வந்தார் தோனி. தோனி இதற்கு முன்னர் இத்தனை ஆண்டுகளில் பலமுறை அணியைச் சரிவிலிருந்து மீட்டிருக்கிறார். ஆனால், அவர் கொஞ்சம் நேரம் பந்தை சாப்பிட்டுவிட்டு செட்டிலாகி அடிக்கும் அளவுக்கெல்லாம் பந்தும் இல்லை, நேரமும் இல்லை. புவி வீசிய 17வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்து மார்க்கோ ஜேன்சன் தோனிக்கு ஸ்லோ பால் ஒன்றை வீச, உம்ரான் மாலிக் இருக்கும் இடத்துக்கே பந்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார் தோனி. 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை.

ஜடேஜா

“இதை வெச்சிட்டு கீழ் திருப்பதி வரைக்கும்தானே போக முடியும்” என்பதுபோல, எப்படியும் 20 ரன்கள் குறைவு என்பதை உணர்ந்தே இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது சென்னை. வில்லியம்சன் வழக்கம்போல அமைதியைக் கடைபிடிக்க, கொஞ்சம் அதிரடி காட்டினார் முகேஷ் சௌத்ரி. மஹீஸ் தீக்‌ஷனா வீசிய ஓவரில் ஒரு கவர் ஷாட் பவுண்டரி, டீப் மிட்விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ் என அடித்து பவர்பிளேயை விக்கெட் இழப்பின்றி முடித்துவைத்தார். இந்த சீசனிலேயே பவர்பிளேவில் குறைவான ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பது சன்ரைசர்ஸ்தான். இந்தப் போட்டிக்கு முன்பு அவர்கள் சராசரி ரன்ரேட் 5.05. இந்தப் போட்டியில் அந்தச் சாதனையையும் தகர்க்க கொஞ்சம் உதவியது சென்னை அணி. ஆறு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தது ஐதராபாத்.

ஜடேஜா வீசிய முதல் ஓவரில் ஐந்து ரன்கள், மொயின் அலி வீசிய முதல் ஓவரில் பத்து ரன்கள் என ரன்கள் வந்து கொண்டிருந்ததே தவிர விக்கெட் விழுந்தபாடில்லை. தேவைப்படும் ரன்ரேட் அதிகமாகிக்கொண்டே இருந்ததால், இதே தொடர்ந்தாலும் பரவாயில்லை என்ற மைண்ட் செட்டில் ஆடியது சென்னை. பத்து ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள். ஜோர்டான் வீசிய ஓவரில், டபுள் அடித்து ஐபிஎல்லில் தன் முதல் அரைசதத்தை பதிவு செய்தார் அபிஷேக் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில், க்ரீஸில் பேட்டை ஒழுங்காக வைக்காததால், அபிஷேக்கிற்கு ஒரு ரன் மட்டுமே வழங்கினார் அம்பயர். அடுத்த பந்தில் சிங்கிள் அடித்து அரைசதம் கடந்தார். லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸர் அடித்து ஜோர்டானின் ஓவரை நிறைவு செய்தார்.

CSK vs SRH

சில மணி நேரமாக போராடிக்கொண்டிருந்த வில்லியம்சனை அவுட்டாக்கி சன்ரைசர்ஸ்க்கு ஆறுதல் அளித்தார் முகேஷ். அதே ஓவரில் சிக்ஸர் அடித்து தன் என்ட்ரியை அமர்க்களத்துடன் தொடங்கினார் ராகுல் த்ரிபாதி. பிராவோவின் ஓவரில் அபிஷேக், ராகுல் என இருவரும் ஆளுக்கொரு பவுண்டரி அடித்தனர். ஒவ்வொரு ஓவருக்கும் தேவையான ரன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அடித்து வந்தது சன்ரைசர்ஸ். முகேஷ் சௌத்ரி வீசிய 15வது ஓவர் 13 ரன்களுக்குச் சென்றது. அபிஷேக் இந்த ஓவரிலும் இன்னுமொரு இமாலய சிக்ஸர் அடித்தார். அடுத்த ஓவரை மிகவும் கட்டுக்கோப்பாக வீசினார் தீக்சனா. வெறும் நான்கு ரன்கள்.

முன்பெல்லாம் சென்னை போட்டிகளில் டைம் அவுட் முடிந்தால், தோனியின் சாமர்த்தியத்தனத்தால் விக்கெட் விழும். இன்று டைம் அவுட் முடிந்து ஜோர்டான் வீசிய முதல் பந்தை லாங் ஆஃப் பக்கம் சிக்ஸருக்கு விளாசினார் திரிபாதி. புல் ஷாட் பவுண்டரி பத்தாது என்பதாக, ஜோர்டானின் விரல்கள் பெயில்ஸை பதம் பார்க்க நோ பால் என்று அறிவிக்கப்பட்டது. நல்லவேளையாக ஃப்ரீஹிட்டில் சிங்கிள் மட்டுமே போனது. ஒரே ஓவரில் 19 ரன்கள். தேவைப்படும் ரன் ரேட் 4க்கும் கீழ் குறைந்துவிட்டது.

அபிஷேக் ஷர்மா | CSK vs SRH

பிராவோவின் பந்தில் ஜோர்டானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் அபி. 3 சிக்ஸர், 5 பவுண்டரி என 75 ரன்கள் எடுத்து, இதற்கு மேல் சன்ரைசர்ஸ் தோற்க வாய்ப்பில்லை என்கிற நிலையில் வெளியேறினார் அபிஷேக். தேவைப்பட்ட ரன்களை அதே 17வது ஓவரிலேயே அடித்து ஆட்டத்தை முடித்து இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது சன் ரைசர்ஸ்.

ஆட்டநாயகனாக அபிஷேக் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோற்றிருக்கிறது சென்னை. பிளேஆஃபுக்காவது செல்லுமா என சோகமாய் இருக்கும் சென்னை ரசிகர்கள் ஆறுதல்பட ஒரு செய்தி இருக்கிறது. நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாய் தோற்றும் 2010ல் கோப்பையை வென்றது சென்னை அணி. ஆனால், ரசிகர்களுக்கு ஏனோ 2020-ன் நினைவுகள்தான் ஞாபகத்தில் எட்டிப் பார்க்கின்றன.

சென்னை அணி இந்த முறை பிளேஆஃப் செல்லுமா? அப்படியே கமென்ட்டில் உங்களின் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.