தொடர் தோல்வியை சந்தித்து வரும் சிஎஸ்கே: ஐதராபாத் அணியுடன் நடந்த போட்டியிலும் படுதோல்வி…

மும்பை: நடப்பாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும், தோல்வி களை மட்டுமே பெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று ஐதராபாத் அணியுடன் நடைபெற்ற 4வது போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது. சன் ரைசர்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின்15-வது சீசன் போட்டிகள் மார்ச் 15ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு, சிஎஸ்கே அணி கேப்டன்சி பொறுப்பில் இருந்து, தோனி விலகிய நிலையில், ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி ஆடி வருகிறது. முதல்போட்டி,  நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. ஆனால், முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்த சிஎஸ்கே அடுத்தடுத்து ஆடிய போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பரிசாக பெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் ஜ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையே போட்டி நடை பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய உத்தப்பா 11 பந்தில் 15 ரன்னிலும் ருதுராஜ் 16 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து இறங்கிய மொயின் அலி-ராயுடு ஜோடி பவுண்டரி சிக்சர்களுடன் ரன்களை உயர்த்தினர். இதனால் சிஎஸ்கே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால்,  சென்னை அணி 98 ரன்கள் இருக்கும் போது அம்பதி ராயுடு 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆனார். 48 ரன்கள் எடுத்திருந்த மொயின் அலி ஆட்டமிழந்தார். இறுதியில்  20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  7 விக்கெட்டு இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

இதனால் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய  அபிஷேக் சர்மா  அதிரடியாக ஆடினார். 50 பந்தில் 75 ரன்கள் எடுத்து அசத்தியதுடன்,  5 போர், 3 சிக்ஸர்கள் என வெளுத்துவாங்கிய நிலையில் அவுட்டானார். அதைத்தொடர்து கேன் வில்லியம்சன் 32 ரன்கள் அடித்த நிலையில்  சிஎஸ்கே வீரரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து இறஙிகிய ராகுல் திரிபாதி 39 ரன்கள் எடுத்த நிலையில்,  பூரன் 5 ரன் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர்.

இறுதியில்,  17.4 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி  2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் இந்த ஐபிஎல் சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

சிஎஸ்கே அணி 4வது ஆட்டத்தில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.