கவுகாத்தி: காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் 2 நாள் செயற்குழு கூட்டம், அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில், இதன் 53 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், இந்த சங்கத்தின் இந்திய பிராந்திய பிரிவின் தலைவரான மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், ‘இந்திய கலாசார நெறிமுறைகள் ஒரு உலகளாவிய குடும்பமாக பார்க்கின்றன. அனைத்து சர்வதேச பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியர்கள் நம்புகிறார்கள். வளர்ச்சிக்கு அமைதியும், உறுதியான நிலைப்பாடும் தேவை. எனவே, நிலுவையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க, மற்ற நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. கிராம அளவிலான அமைப்புகள் முதல் நாடாளுமன்றம் வரை, அனைத்து மட்டங்களிலும் ஜனநாயக செயல்முறையை நாங்கள் கொண்டுள்ளோம். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம். நாட்டில் உள்ள பன்முகத்தன்மை ஜனநாயகத்தை வலுப்படுத்தி உள்ளது,’ என்று தெரிவித்தார்.