இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதை தடுக்க நாடாளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் பரிந்துரைத்தார். இதனையடுத்து, நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் அதிபர் கலைத்தார்.
நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாடாளுமன்றம் கலைக்கபப்ட்டது செல்லாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்ற சபாநாயகர் அசாத் குவாய்சர் மற்றும் துணை சபாநாயகர் காசிம் சுரி தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவித்து சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியை இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
சபாநாயகர், துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தபோதும் தற்காலிக சபாநாயகர் தலைமையில் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.