கல்லூரி தேர்வு கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்“ என்று வாக்குறுதி அளித்து, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணங்களை எல்லாம் 2 மடங்கு, 3 மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து தற்போது தான் ஓரளவு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. அனைவரும் பணிக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை இயல்பான நிலையை அடைய மேலும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்கின்ற நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டணங்கள் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், சில இனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும்பாலான மாணவ, மாணவியர் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும், இந்தத் தேர்வுக் கட்டண உயர்வு என்பது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்ற அச்சமும் தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது.

எனவே, முதல்-அமைச்சர் மாணவ-மாணவியரின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று நோயினால் ஏற்பட்ட பாதிப்பினைக் கருத்தில் கொண்டும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் உள்பட அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக ரத்து செய்யவும், இனி வருங்காலங்களில் பிற பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்… 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.