இலங்கையில் இருந்து மேலும் 19 பேர் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி வந்துள்ளனர்.
5 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து படகுகள் மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன.
கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே 20 பேர் தமிழகத்திற்கு படகுகள் மூலம் வந்தனர்.
இந்நிலையில் 5 குடும்பங்களை சேர்ந்த மேலும் 19 பேர் தனுஷ்கோடிக்கு வந்திருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனுஷ்கோடி அருகே அரிசல்முனைக்கு வந்த 19 பேரிடம் கியூபிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.