BB Ultimate 70: வென்றாரா பாலா?! இறுதிக்கட்டம்; ஃபேர்வெல் கொண்டாடிய ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் அல்டிமேட் சீசன் அதன் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது. சீசனின் வின்னர் யாரென்கிற தகவல்கூட தெரிந்திருக்கும். வழக்கமான சீசன்களோடு ஒப்பிடும் போது அல்டிமேட்டில் சுவாரசியம் சற்று குறைவாகத்தான் இருந்தது. இதன் போட்டியாளர்கள் அனைவருமே பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பதால் முந்தைய சீசன்களில் அம்பலமான தவறுகள் மீண்டும் நிகழாதவாறு கவனமாக பார்த்துக் கொண்டார்கள். அதுவே ஒரு செயற்கைத்தன்மையை உருவாக்கிவிட்டதாகத் தோன்றுகிறது.

எபிசோட் 70 -ல் நடந்தது என்ன?

புகைப்படங்களை பரஸ்பர சிரிப்புடன் வேடிக்கை பார்த்தது முடிந்ததும் பிரியங்காவும் பாவனியும் விருந்தினர்களாக உள்ளே வந்திருப்பதைக் காண முடிந்தது. ஒவ்வொரு போட்டியாளரும் மேடைக்கு வந்து இதர போட்டியாளர்களுடன் தன்னுடைய பயணம் எப்படி இருந்தது என்பதைப் பகிரவேண்டிய டாஸ்க்கை பிக் பாஸ் தந்திருந்தார். எபிசோட் தொடங்கியபோது சுருதி பேசிக் கொண்டிருந்தார். நாணயத் திருட்டு காரணமாக கடந்த சீசனில் எலியும் பூனையுமாக இருந்த சுருதியும் தாமரையும் அல்டிமேட்டிற்குப் பிறகு தாயும் மகளுமாக மாறி பாசத்தைப் பொழிந்து கொண்டிருப்பதில் நமக்குமே ஒரு செய்தி உள்ளது. இந்த உலகத்தில் எவருமே நிரந்தரமான பகைவர் கிடையாது. சுருதிக்குப் பிறகு அபிநய் மேடையேறி, மணிரத்னம் திரைப்பட பாத்திரத்தைப்போல தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து பொளந்து கட்டினார்.

நிரூப், அனிதா

பாசத்தால் நெகிழ வைத்த அனிதா – நிரூப்

69-ம் நாள் விடிந்தது. ‘நான் பாம்பே பொண்ணு’ என்கிற குத்துப்பாட்டை அலற விட்டு மக்களை எழுப்பினார் பிக் பாஸ். இந்த சீசனில் இத்தனை நாள் போராடியதற்கான இறுதி விடை கிடைக்கப்போகும் தருணம் என்பதால் நிரூப் படபடப்பாக இருக்க “கடைசி வாரத்துல எதுவும் மாறப் போறதில்லை. ரிலாக்ஸ்டா இரு” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா. இந்த சீசனில் நாம் பார்த்து ரசித்த சிறந்த விஷயங்களுள் ஒன்றாக அனிதா – நிரூப் நட்பைச் சொல்லலாம். இது நிரூப்பிற்கு சற்று பின்னடைவைத் தந்த விஷயமாக இருந்தாலும் விளையாட்டு என்பதைத்தாண்டி தங்களின் பாசத்தை வெளிப்படுத்துவதில் இருவருமே குறை வைக்கவில்லை.

பாவனி, ப்ரியங்கா, தாமரை, நிரூப்

கல்லூரியின் கடைசி நாள் போல டீஷர்ட்டில் கையெழுத்திட்டு வாழ்த்துச் செய்திகளை எழுதச் சொல்லியிருந்தார் பிக் பாஸ். ஒவ்வொருவரும் தனக்கு எழுதப்பட்ட வாசகத்தை வாசித்து ‘அதை யார் எழுதியிருந்தார்?’ என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் பகுதியில் நகைச்சுவையும் நெகிழ்வும் கலந்திருந்தது. முதலில் வந்த நிரூப், “தாமரை.. மேல எனக்கு நிறைய பாசம் உண்டு. ஆனா அந்த விஷயம் எனக்கு சறுக்கலை ஏற்படுத்திமோன்னு கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்” என்கிற வாக்குமூலத்துடன் ஆரம்பித்தார். (இதே விஷயம் அனிதாவிடம் தோன்றவில்லையா?!). நிரூப் நெகிழ்ந்து சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் பயங்கரமாக கிண்டல் செய்து ஜாலியாக பழி தீர்த்துக்கொண்டிருந்தார் பிரியங்கா. ‘வாழ்த்துச் செய்தி’ என்கிற பெயரில் அனிதா ஒரு பெரிய கட்டுரையையே டீஷர்ட்டில் எழுதி வைத்திருக்க “போன சீசன்ல எனக்கு பிரியங்கா மாதிரி, இந்த சீசன்ல எனக்கு அனிதா” என்று நெகிழ்ந்தார் நிரூப். “எங்க அம்மாவை அனிதாக்குள்ள பார்த்தேன்” என்று நிரூப் உருகியது, உண்மையிலேயே பார்க்க அழகாக இருந்தது.

“எனக்கு குழந்தை பிறந்தா அபிநய் மாதிரி பார்த்துக்குவேன்”

அடுத்ததாக பாலா மேடைக்கு வந்து வாழ்த்துச் செய்திகளை வாசிக்க ஆரம்பித்தார். “நீ இன்னமும் சிரிச்சா அழகா இருப்பே” என்று பிரியங்கா எழுதியது சரியான குறிப்பு. “இந்த வீட்டோட ராசி அப்படி” என்று பதில் சொன்னார் பாலா. “ஹார்ட் தரும் டாஸ்க்கில் “நீங்கள் ஒரு சிறந்த தந்தை”-ன்னு அபிநய் கிட்ட மனப்பூர்வமானத்தான் சொன்னேன்.. எனக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பொறந்தா அதை அபிநய் மாதிரி சிறந்த தந்தையா பார்த்துக்கணும்னு தோண்ற அளவுக்கு ஃபீல் ஆச்சு” என்று வெட்கத்துடன் நெகிழ்ந்தார் பாலா. ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, உன் எதிரிகளுக்கு நீ தருவே புத்தூர் கட்டு’ என்று யாரோ பன்ச் வசனத்தின் மூலம் பாலாவைப் புகழ்ந்திருந்தார்கள். (ரம்யா விஷயத்தில் புத்தூர் கட்டு என்பது உண்மையாகி விட்டது!). “எனக்கு வாழ்வு கொடுத்த தெய்வமே அனிதாதான். அவங்களை வெச்சுதான் ஆறு வாரம் ஓட்டினேன்” என்று சிரித்தார் பாலா. ரம்யாவுடன் சூடான வாக்குவாதங்களை நிகழ்த்தினாலும் ரம்யாவின் வாதத்திறமையை உள்ளார வியந்ததாக பாலா குறிப்பிட்டது நல்ல விஷயம்.

முகேன்

‘கட்டில் உடைப்பு’ புகழ் முகேன் என்ட்ரி

மெயின் கேட்டில் பாட்டுச் சத்தம். ஆச்சரிய வருகையை முகேன் தந்தார். அனைவரையும் அரவணைத்த முகேன், வீட்டிற்குள் செல்ல “பெட்ரூம் பக்கமெல்லாம் போய் பாருங்க. இந்த முறை கட்டில்லாம் ஸ்ட்டிராங்கா போட்டிருக்கோம்” என்று கிண்டல் செய்தார் பிக் பாஸ். பிறகு பிக் பாஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க “சத்தியமா.. நான் சொல்லுறண்டி’ பாடலை பாடிக் காட்டினார் முகேன். (வேற எதுவும் கம்ப்போஸ் பண்ணலையா?!).

“இறுதிப் போட்டியாளர்கள் தவிர மற்றவர்கள் கார்டன் ஏரியாவிற்கு போங்க” என்று கறார் குரலில் பிக் பாஸ் அறிவிப்பு செய்ய வீட்டிற்குள் டென்ஷன் ஏறியது. “ஏதாவது எலிமினேஷனா.. ஒருவேளை முகேன் அதற்குத்தான் வந்திருக்கிறாரா?” என்றெல்லாம் சந்தேகத் தீ வீட்டிற்குள் பரவ “ஒண்ணுமில்லை” என்பதுபோல் சூசகமான ஆறுதலை முகேன் சொன்னது சிறப்பு. போகிற சமயத்திலும் பாலாவிடம் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் சுஜா. (வந்த வேலையை சிறப்பா பார்க்கறீங்கம்மா!). “நாமளால் ஃபைனலிஸ்ட்டாம்டா. இப்பத்தான் ஞாபகம் வருது” என்று நிரூப்பிடம் ஜாலியாக சொல்லிக் கொண்டிருந்தார் பாலா. இருந்தாலும் ‘ஏதோ நடக்கப் போகிறது’ என்கிற திகிலுடன் நால்வரும் உள்ளே உட்கார்ந்திருந்தார்கள். வெளியே அமர்ந்திருந்தவர்களை நோக்கி இவர்கள் கைகாட்டி மகிழ “அதை வெளியத்தான் போய் காட்டுங்களேன். ஏன் இங்கயே உட்கார்ந்திருக்கீங்க..?” என்று கேட்டு பங்கம் செய்தார் பிக் பாஸ். இப்போதெல்லாம் போட்டியாளர்களை விடவும் பிக் பாஸ்தான் அதிகம் Prank செய்ய ஆரம்பித்திருக்கிறார். (என்னாவொரு வில்லத்தனம்?!).

MY3 – வெப்சீரிஸ் லோகோ லான்ச் – ஹன்சிகா என்ட்ரி

கார்டன் ஏரியாவில் நிறைய இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அனைவரும் அதில் சென்று அமர்ந்தார்கள். ஏதோவொரு முக்கிய அறிவிப்பு வரப்போவதற்கான அறிகுறி தெரிந்தது. அது முகேன் – ஹன்சிகா நடிப்பில் வெளிவரவிருக்கும் வெப்சீரிஸின் ‘லோகோ’ அறிமுகமாம். ‘A Robotic Love Story’ என்கிற டேக்லைன் ‘எந்திரனை’ நினைவுப்படுத்தினாலும் இயக்குநர் எம்.ராஜேஷ் என்பதால் தன்னுடைய பிரத்யேக நகைச்சுவைப் பாணியில் சிறப்பாக உருவாக்கியிருப்பார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ‘MY3’ என்கிற இந்தத் தொடரின் தலைப்பை ‘மைத்ரி’ என்றும் வாசிக்கலாம்.

MY3 – ப்ரமோஷன்

“ஹன்சிகாவால வர முடியல. அதனால அவங்க பேசிய வீடியோவைப் பார்க்கலாம்” என்று பில்டப் தந்தார் முகேன். ஆனால் மெயின் கேட்டில் பாடல் ஒலிக்க ஹன்சிகாவே உள்ளே வந்தார். பழைய ஹன்சிகாவில் பாதியாகியிருந்தாலும் க்யூட்னஸ் குறையவில்லை. “முதல்ல எனக்கு வீட்டை சுத்திக் காட்டுங்க” என்று உள்ளே சென்ற அவரிடம், ஆங்கிலத்தில் பொளந்து கட்டி சுற்றுலா கைடு மாதிரி வீட்டைச் சுற்றிக் காட்டினார் அனிதா. “இது என்ன ஸ்பெஷல் படுக்கை?” என்று Restricted Area பக்கம் சென்ற ஹன்சிகாவிடம் “அது எங்களுக்கு Danger ஏரியா” என்பதை சுட்டிக் காட்டிய போட்டியாளர்கள் “ஆனா.. நீங்க போகலாம்” என்று அழைத்துச் சென்றார்கள். “பாலா.. நீங்க போய் அதுல ஜம்ப் பண்ணுங்க” என்று ஹன்சிகா கேட்டவுடன் “பிக் பாஸாவது.. ஒண்ணாவது..” என்று பாய்ந்து போய் விழுந்தார் பாலா.

இந்த வெப்சீரிஸில் தனது பாத்திரம் எத்தகையது என்பதை பிறகு விளக்கமாகச் சொன்ன ஹன்சிகா, பிறகு ரோபோ மாதிரி நடந்து போட்டியாளர்களை வாழ்த்தியது சுவாரசியம். ‘லோகோ’ அறிமுக நிகழ்ச்சி தொடங்கியது. இதன் இசைக்கு நடனம் ஆட தயக்கத்துடன் எழுந்த முகேனை, ஆச்சரிய வருகையாக வீடியோவில் வந்து சாண்டி மாஸ்டர் கற்றுத் தந்தார். பிறகு அதே நடன அசைவை போட்டியாளர்கள் அனைவரும் முயன்று பார்த்தார்கள். இதன் டைட்டில் மியூசிக்கை நம் மனங்களில் பதிய வைக்கும் வணிக உத்தி போல ஒரு பக்கம் தோன்றினாலும், இன்னொரு பக்கம் ஜாலியாகவே இருந்தது.

ரோபோ நடனம் ஆடி மகிழ்வித்த போட்டியாளர்கள்

ரோபோ மூவ்மெண்ட்டில் நடனம் ஆடி அசத்தினார் சுரேஷ் தாத்தா. ‘அய்யோ.. டான்ஸா..?’ என்று பதறியபடி வந்த நிரூப், தன்னம்பிக்கையில்லாமலே ஆடி சொதப்பி விட்டுச் சென்றார். “சரியா ஆடினீங்கன்னா.. என் கூட டேட்டிங் வரலாம்” என்று ஹன்சிகா உசுப்பேற்றியதும், முகமெல்லாம் வெட்கமாக வந்தாலும் பாலாவால் சரியாக ஆட முடியவில்லை. “அப்போ டேட்டிங் கிடையாது. வெறும் காஃபிதான்” என்று பங்கம் செய்தார் ஹன்சிகா. (நடிப்புத்துறையில் ஆசையுள்ள பாலாவும் நிரூப்பும் இன்னமுமா நடனம் ஆட கற்றுக்கொள்வில்லை?!). இவர்களோடு ஒப்பிடும் போது தாமரை செய்த முயற்சியே நன்றாக இருந்தது. அடுத்து வந்த அனிதாவும் நன்றாக ஆடினார். (பிபி ஜோடிகள் அனுபவம் போல). இருப்பதிலேயே ஷாரிக் ஆடியதுதான் சூப்பர். பிறகு எல்லோரும் இணைந்து இந்த நடன அசைவை முயற்சிப்பதோடு எபிசோட் நிறைந்தது.

பாலா

இன்று Finale Episode. எனவே அந்தச் சம்பிரதாயங்களோடு கொண்டாட்டாக நிகழும். வெற்றியாளர் யார் என்பது கசிந்து விட்டாலும் இந்த வைபவங்களோடு இணைந்து முடிவை அறிவதுதான் நமக்கு சுவாரசியம். ரன்னர் – அப் யார், யார் எலிமினேட் ஆனது என்பதையும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களின் இடையில் அறிந்து கொள்ள முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.