நாட்டில் உள்ள விவசாயிகள் மேலும் வலுப்பெற்றால் புதிய இந்தியா மேலும் வளம் பெறும்: பிரதமர் நரேந்திர மோடி ட்விட்

டெல்லி: விவசாயிகளுக்கு பலன் அளித்த மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் விவரங்களை பிரதமர் மோடி ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அறுவடை காலம் மற்றும் பைசாகி பண்டிகைக்கு முன்னதாக, விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்த மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்கள் பற்றிய விவரங்களை பிரதமர் மோடி டுவிட்டரில்  பகிர்ந்து கொண்டார். வளமான தேசத்திற்கு வலுப்பெற்ற விவசாயிகளே முக்கியம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் பைசாகி, மராட்டியத்தில் குடி பத்வா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உகாதி,  ஜம்மு காஷ்மீரில் நவ்ரே, மேற்கு வங்காளத்தில் பொய்லா போயிசாக், அசாமில் போஹாக் பிஹு மற்றும் கேரளாவில் விஷு என பல்வேறு பெயர்களில் அறுவடைக் காலம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: “நமது விவசாய சகோதர சகோதரிகளால் நாடு பெருமை கொள்கிறது. நாட்டில் உள்ள விவசாயிகள் மேலும் வலுப்பெற்றால் புதிய இந்தியா மேலும் வளம் பெறும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்கள் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பதிவிட்டு சில படங்களையும் பதிவிட்டுள்ளார். அந்த படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவி வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுநோய்களின் போது ரூ.1.30 லட்சம் கோடி மாற்றப்பட்டது. இதன் பலன், குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு சென்றடைந்துள்ளது. விவசாய உள்கட்டமைப்பு நிதியின் கீழ், விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது. 11,632 திட்டங்களுக்கு ரூ.8,585 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் சந்தை (e-NAM) என்பது இந்தியாவில் விவசாயப் பொருட்களுக்கான ஆன்லைன் வர்த்தக தளமாகும். இ-நாம் தளத்தில் 1.73 கோடி விவசாயிகள் பதிவு செய்து, ரூ.1.87 லட்சம் கோடி வர்த்தகம் செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.