“தமிழ்நாடு தாண்டினாலே மும்மொழிக்கொள்கைதான்!” – பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்

“தமிழ்நாடு தாண்டினால் மும்மொழிக்கொள்கைதான் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாடு வருகையின் போது பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு தரப்படும்” என பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி 42வது ஆண்டு விழாவில் பங்கேற்று, மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கட்சி துவக்க நாளை மிக பிரம்மாண்டமாக பாஜக கொண்டாடி வருகின்றது. இதேபோல அம்பேத்கரின் பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு உள்ளோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவது குறித்து, கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும். எனினும் அவர் தமிழகம் வரும்போது மிக பிரம்மாண்ட அளவில் வரவேற்பு கொடுக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
image
தொடர்ந்து அமித்ஷாவின் இந்தி கருத்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, “தமிழ்நாடு தாண்டினால் மும்மொழிக்கொள்கைதான். தமிழ்நாட்டில் மட்டும் தான் இருமொழிக் கொள்கை இருக்கிறது. அதுதான் நிதர்சனம். அதுமட்டுமல்ல. இவர்கள் நடத்தும் பள்ளிகளிலும்கூட இந்தி கற்றுக் கொடுப்பது ஏன்?” என்றார். பின்னர் பாஜக-வுக்குள் நிகழும் உட்கட்சி பிரச்னைகள் குறித்து பேசுகையில், “மாநில நிர்வாகிகள் நியமனத்தில் பாஜகவில் அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. உழைப்பவர்களுக்கு நிச்சயம் உயர்வுண்டு. அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறினார்.
சமீபத்திய செய்தி: ‘என்ன மொழி பேச வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்’ – தெலுங்கானா அமைச்சர் பதிலடிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.