பாகிஸ்தானில் சுதந்திர போராட்டம் மீண்டும் தொடங்குகிறது- இம்ரான் கான் கருத்து

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுதது பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கம் செய்யப்பட்டார்.
அந்நாட்டு புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷெரீப்பை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை கூடும் பாராளுமன்ற கூட்டத்தில் புதிய பிரதமருக்கான வேட்புமனுவை ஷபாஸ் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிறகு இம்ரான்கான்,  தமது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நாடாளுமன்ற குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். 
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஷபாஸ் தாக்கல் செய்யும் வேட்பு மனு நிராகரிக்கப் படாவிட்டால், பாராளுமன்றத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக பிடிஐ கட்சி உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் 1947 இல் சுதந்திர நாடானது, ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் உள்ள வெளிநாட்டு சதிக்கு எதிராக இன்று மீண்டும் சுதந்திரப் போராட்டம் தொடங்குகிறது. நாட்டின் இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் எப்போதும் பாதுகாப்பது நாட்டு மக்களே என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.