போராட வீதியில் இறங்கிவிட்டேன் – இலங்கை முஸ்லிம் பெண்ணின் பரபரப்பு பேட்டி




Courtesy: BBC Tamil

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

”கோட்டாபய கோ ஹோம்” என கோஷங்களை எழுப்பியவாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடி போராடி வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கொழும்பு – காலி முகத்திடலுக்கு தன்னிச்சையாக கூடிய பெரும் எண்ணிக்கையிலானோர் நேற்றைய தினம் தன்னெழுச்சிப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டத்தில் பெருமளவில் இளைஞர், இளம் பெண்களே கலந்துக்கொண்டிருந்தனர்.

இதில் கலந்துக்கொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், சாலை நடுவில் அமர்ந்து, நோன்பு திறந்து, தொழுகைகளில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில், ஏனைய மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவர்களுடன் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அத்துடன், நோன்பு திறந்து தொழுகைகளில் ஈடுபட்ட இஸ்லாமியர்களுக்கு, ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு உதவிகளையும் செய்திருந்தனர்.

  

சாலைகளில் நோன்பு திறந்த சந்தர்ப்பத்தில், ஏனைய மதத் தலைவர்களும் இஸ்லாமியர்களுடன் கைக்கோர்த்திருந்தனர்.  

இதையடுத்து, போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த முஸ்லிம் பெண்கள், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தனர்.  

”எங்களுக்கு வேறு நாடு இல்லை. இது தான் நாடு” என போராட்டத்தில் கலந்துக்கொண்ட சப்ரா தெரிவிக்கின்றார்.  

”இது எங்கட நாட்டுக்காக போராடுறோம் இன்றைக்கு. இது எங்கட நாடு. நாங்கள் எல்லாம், சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்றா சேர்ந்து வாழுகிற நாடு இது. எங்களுக்கு இந்த நாடு வேண்டும். நாங்க சந்தோசமாக இருக்க வேண்டும். எங்களுக்கு வேறு ஒன்றும் நாடு இல்ல. இது தான் நாடு. மனுசன்கள் போவாங்க. படிப்பாங்க வெளி ஊருக்கு. ஆனால் இது எங்கள் நாடு. இதைவிட்டுப் போகமாட்டோம். எங்களுக்கு சுதந்திரம் தேவை”.  

அவங்க முழு உலகத்துக்கும் நாட்டை வித்துட்டாங்க. எங்க சொத்து எங்களுக்கு வேணும். இது என் தாய் நாடு. நான் இங்கேதான் பிறந்தேன். இங்கேதான் இறப்பேன். எனக்கு ரொம்ப மன வருத்தம். ஆனால், கோட்டாபய இன்று எங்களை ஒன்று சேர்த்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த ஒன்றுக்காக மட்டும் நன்றி சொல்லவேண்டும்” என சப்ரா கூறுகிறார்.  

”எங்கள் பிள்ளைகளோட பிள்ளைகளும், கடனை கட்டும் நிலைமை ஏற்பட்டிருக்கு, இந்த நாட்டை ஆட்சியாளர்கள் திருப்பித்தர வேண்டும்” என போராட்டத்தில் கலந்துக்கொண்ட அப்ஷா குறிப்பிடுகிறார்.  

 

”இவரு போகத்தான் வேண்டும். இந்த நாட்டில் எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கு? எங்களுக்கு பெட்ரோல் இல்லை. டீசல் இல்லை. எங்களுக்கு வண்டி இல்லை. எங்கள் வாழ்க்கையில் எல்லாமே, கல்வி எல்லாமே எடுத்துட்டாங்க. எங்கள் நாட்டைத்தான் நாங்கள் திருப்பி கேட்கிறோம். வேறு ஒன்றும் இல்லை. அவர் திரும்பி போகலாம். எங்கள் நாட்டை எங்களுக்கு திருப்பி தந்துட்டு திருப்பி போகலாம். எங்களுக்கு பிறக்க இருக்குற பிள்ளைகளுக்கும் இந்த கடனை கட்ட வேண்டிய நிலைமை ஆகிவிட்டது.  

இந்த நாட்டுல இருந்து நாங்க போனா, இந்த நாட்டை யாரு காப்பாத்துறது? இந்த போராட்டம் பண்ணுறதே, எங்களுக்கு எங்க நாட்ட குடுங்க. எங்கள் பிள்ளைகளோட பிள்ளைகளுக்கு நிம்மதியாக வாழ்க்கைய கொண்டு போகிற மாதிரி நாட்டை கொடுங்கள் என்று கேட்பதற்குதான். இந்த போராட்டத்தை தொடர்வேன் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் போகாவிட்டால் போராடிக்கொண்டே இருப்போம்” என அப்ஷா தெரிவிக்கிறார்.

”தமிழ் பேசும் சிறுபான்மையாக அணியும் ஆடை முதல் ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்தேன். பொறுத்து கொண்டேன், இனி பொறுத்து கொள்ள முடியாது. போராட முதல் தடவையாக வீதிக்கு இறங்கி விட்டேன். முடிவு வரும் வரை நாட்டுக்காக போராடுவேன்” என ரஸானா குறிப்பிடுகிறார்.

  

”நாட்டை காப்பாற்றப் போராடுறோம். மக்களுக்காக போராடுறோம். வருங்காலத்தை நினைத்துப் போராடுறோம். இந்த போராட்டம் நிற்கப்போவது இல்லை. கோட்டா விலகும் வரை போராட்டம் நடக்கும். நாடு கடன் பட்டு, இவ்வளவு கஷ்டம் வருவதற்கு கோட்டாபய மட்டும் அல்ல. ராஜபக்ஷ குடும்பம் மொத்துமுமே காரணம். அது நிற்கும்வரை நாங்கள் போராடுவோம். எதிர்காலம் இன்னும் கேள்விக் குறியாகத்தான் இருக்கும். எனக்கு எந்தநாளும் சவால்தான்.  

இது வந்தது இன்று நேற்றல்ல. ராஜபக்ஷ அரசாங்கம் எப்போது வந்ததோ, அப்போது இருந்து, தமிழ் பேசும் மக்கள், இந்த இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்கள் பல சவால்களை சந்தித்தோம். வாழ்க்கையில முதல் தடவையாக போராட்டத்துக்கு வந்திருக்கேன்.  

இதுக்கு முன்பு நடந்த அவ்வளவு சவாலையும் நான் பொறுத்துக் கொண்டேன். இப்போது முடியாது. சாலையில் இறங்கிவிட்டேன். கோட்டா வீட்டுக்கு போகும் வரைக்கும் நிறுத்தப் போவது இல்லை. கோட்டா எத்தனை பேரை இல்லாமம் ஆக்கமுடியும்? எத்தனை பேரை அழிக்க முடியும்? இதுக்கு முன்னாடி ராஜபக்ஷ குடும்பம் எத்தனை பேரை அழித்தது. இனி எத்தனை பேரை அழிக்க முடியும்? அதற்கு நாங்கள் தயார்” என ரஸானா தெரிவிக்கிறார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.