‘சுரேஷ்ராஜன் பெயரை கண்டுபிடிங்க…’ புதிர் போடும் குமரி தி.மு.க-வினர்

திமுகவில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக, 2 முறை அமைச்சர், மு.க.ஸ்டாலினுக்கு நெறுக்கமானவராக செல்வாக்காக வலம் வந்த சுரேஷ் ராஜன், தற்போது திமுக பொதுக்கூட்ட நோட்டீசில் ‘சுரேஷ்ராஜன் பெயர் எங்கே இருக்கிறது கண்டுபிடிங்க…’ என்று கன்னியாகுமரி திமுகவினர் புதிர் போடும் நிலை வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவின் முகமாக இருந்தவர் சுரேஷ் ராஜன். கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். 2 முறை அமைச்சராக இருந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்தார். எல்லாத்தையும் விட, மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தவர். ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் நெருக்கமானவர். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சுரேஷ் ராஜன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகி இருந்தால் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பார். அவர் தோல்வியடைந்ததால், அவரால் அமைச்சராக முடியாமல் போனது. அதற்கு பதிலாக, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜ் அமைச்சராக்கப்பட்டார்.

ஆனாலும், சுரேஷ் ராஜன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக வலம் வந்தார். ஆனால், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகான, நாகர்கோவில் நகராட்சி மேயர் தேர்தலில் நடந்த விவகாரங்கள், திமுகவில் சுரேஷ் ராஜனின் நிலையை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.

நாகர்கோவில் நகராட்சியில் திமுக காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை வெற்றி பெற்று இருந்தாலும், திமுகவின் மேயர் வேட்பாளரை எதிர்த்து பாஜக மேயர் பதவிக்கு வேட்பாளரை இறக்கியது. நாகர்கோவில் மாநகராட்சி கை நழுவிப் போகலாம் என உளவுத் துறை நோட் போட, திமுக தலைமை உஷாரானது. உடனடியாக, திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனை அனுப்பி, கவுன்சிலர்களை சரி கட்டி நாகர்கோவில் மேயர் பதவியை திமுக உறுதி செய்தது. இந்த விவகாரத்தில், சுரேஷ் ராஜன் மீது அதிருப்தி அடைந்த திமுக தலைமை அவரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆய்வு செய்ய சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுரேஷ் ராஜனை சந்திக்காமல் தவிர்த்ததை அப்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதற்கு பிறகு, சுரேஷ் ராஜன் கன்னியாகுமரியில் திமுக நிகழ்ச்சியில் ஓரங்கட்டப்பட்டு வருகிறார். சுரேஷ் ராஜன் கட்சிப் பதவி இல்லாமல் அமைதியாக இருந்து வருகிறார். அமைச்சர் மனோ தங்கராஜ், ஆதரவாளர்களின் கைகளே ஓங்கியுள்ளன.

இந்த சூழ்நிலையில்தான், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்திற்கான நோட்டீஸில் சுரேஷ் ராஜனின் பெயர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள் என்று திமுகவினரே புதிர்போடும் அளவுக்கு அவருடைய பெயர் மிகவும் கீழே போடப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸைக் குறிப்பிட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிரி ஆதரவாளர் கபிலன், தனது முகநூல் பக்கத்தில், “முன்னாள் அமைச்சர், முன்னாள் மாவட்ட செயலாளர் என். சுரேஷ் ராஜன் பெயர் எங்கே இருக்கிறது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.” என்று புதிர் போட்டுள்ளார்.

மேலும், அந்த பதிவில், “அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். என். சுரேஷ் ராஜன் எந்த கட்சியும் மாறாத கழக உடன் பிறப்பு, சில நாட்களுக்கு முன்பு முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் சுரேஷ் ராஜன் இல்ல விழாவிற்கு, நாகர்கோவில் வந்து வாழ்த்தி சென்றார்கள். அரசியலில் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக் கூடாது.” என்று பதிவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவின் முகமாக இருந்த சுரேஷ் ராஜனின் பெயர் இன்றைக்கு திமுகவின் நோட்டீஸில் எங்கே இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்று புதிர் போடும் நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், சுரேஷ் ராஜன் திமுகவில் மீண்டும் பழைய நிலை அடைவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.