பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சி: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த மேயர் ஆர்.பிரியா, அதில் உள்ள திட்டங்கள் குறித்து அறிவித்ததாவது:

மாநகராட்சி அலுவலகங்களில் கோப்புகளைக் கையாள்வதற்கான நேரத்தைக் குறைக்க, மின்னணுஅலுவல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் மக்களுக்கான சேவைகளை விரைவாக செய்துதர முடியும்.

பணியாளர்களின் வருகை, துறை செயல்பாடுகளைக் கண்காணிக்க புதிய செயலி வெளியிடப்படும். பொதுமக்கள் க்யூஆர் கோடு மூலம் சொத்துவரி செலுத்த வழிவகை செய்யப்படும். ரிப்பன் கட்டிடம் மற்றும் அனைத்து வட்டார அலுவலகங்களிலும் சொத்துவரி செலுத்த தானியங்கி கருவி நிறுவப்படும்.

நம்ம சென்னை செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் புதுப்பித்தல், ஆன்லைனில் கட்டிடத் திட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.

பள்ளிகளில் பாலின சமத்துவம் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், பாலினக் குழுக்கள் அமைக்கப்படும். 70 மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணைய இணைப்பு வழங்கப்படும்.

மாணவிகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி மூலம் ரூ.23.66 கோடியில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல், கழிவறைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.5.47 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ரூ.6.91 கோடியில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கப்படும்.

திருவான்மியூர் பகுதியைச் சுற்றியுள்ள மாநகராட்சிப் பள்ளிமாணவர்களுக்கு, தன்னார்வலர்கள் மூலம் காலை உணவு வழங்கும் திட்டம், ஆங்கிலப் பயிற்சித் திட்டம் ஆகியவை விரிவாக்கம் செய்யப்படும்.

சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்காக 6 இடங்களில் டயாலிசிஸ் மையங்கள் செயல்படுகின்றன. ரூ.3.50 கோடியில் மேலும் 3 டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

வீடு வீடாக குப்பை சேகரிக்க 795 பேட்டரி வாகனங்கள் வழங்கப்படும். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில், ரூ.8.43 கோடியில் டிஜிட்டல் சாலை பெயர்ப் பலகைகள் நிறுவப்படும். 1,000 இடங்களில் தனியார் மூலம் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு, ரூ.52.26 கோடி வருவாய் ஈட்டப்படும்.

மாநகரில் பசுமைப் போர்வையை அதிகரிக்க 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மாமன்ற உறுப்பினர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.