பெட்ரோல் விலை உயர்வு மற்றும் கொரோனா காரணமாக சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக AVON சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
AVON சைக்கிள் நிறுவனம் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி புதிய சைக்கிள் வகைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய சைக்கிள்களின் விலை மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர்.
அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் கொரோனா காலத்துக்கு பிறகு சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் உடற்பயிற்சி மட்டுமின்றி சைக்கிள் பயன்படுத்துவதிலும் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
மேலும் தமிழக முதலமைச்சர் அவ்வப்போது தொடர்ந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருவதால், பொதுமக்கள் இடையையும் சைக்கிள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. சைக்கிள் மீதான ஆர்வம் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினர் இடையேயும் அதிகரித்திருக்கிறது.
சைக்கிள் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை கடந்த ஓராண்டில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. மூலப் பொருட்களின் விலை குறையும்போது சைக்கிள் விலையும் படிப்படியாக குறையத் தொடங்கும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் சைக்கிள் பயன்பாட்டுக்கு என தனி பாதையை உருவாக்கிக் கொடுத்தால் சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுகுறித்து தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் சைக்கிள் ஓட்ட தனி பாதையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM