சென்னையில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டன. கடந்த மாதம் முன்பு வரை 500-க்கும் மேல் இருந்த தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது.

மே மாதத்தில் பாதிப்பு 100-க்குள் வந்திருந்ததை தொடர்ந்து பரவல் கணிசமாக குறைந்தது. கொரோனா உயிரிழப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதோடு 5,6 மாவட்டங்களில் மட்டுமே தொற்று இருந்து வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் தொற்று பரவல் மேலும் சரிந்து 30-க்கும் குறைவானது. கடந்த 1-ந்தேதி 32 ஆக இருந்த தொற்று பாதிப்பு படிப்படியாக 21 வரை குறைந்தது. சென்னையிலும் அது 10-க்குள்ளாக இருந்தது. மொத்தமுள்ள 15 மணடலங்களில் 13 மண்டலங்களில் மட்டும் 1, 2 என்ற அளவில் பாதிப்பு இருந்தது.

நேற்று முன்தினம் தமிழக பாதிப்பு 21 ஆக இருந்த நிலையில் நேற்று அது 30 ஆக உயர்ந்தது. சென்னையில் கடந்த 1-ந்தேதி பாதிப்பு 14 ஆக இருந்த நிலையில் அது 2-ந்தேதி 12 ஆகவும், 3-ந்தேதி 9 ஆகவும் குறைந்தன.

நேற்று முன்தினம் 9 பேருக்கு தொற்று பரவிய நிலையில் அது நேற்று 16 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 7 பேருக்கு பரவியது. எந்த பகுதியில் தொற்று பரவல் ஏற்பட்டது என்று சுகாதாரத்துறை ஆய்வு செய்த போது அடையாறு மண்டலத்தில் 2 இடத்தில் மட்டும் தொற்று அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

திருவான்மியூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையின் கவனம் திரும்பியது. அந்த குடியிருப்பில் வசிக்கும் வேறு யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளதா என மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் ஒரே குடும்பத்தில் திடீரென தொற்று ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களுடன் தொடர்பு உடையவர்கள் யார்? யார்? என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தோடு தொடர்புடையவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதவிர ராஜா அண்ணாமலை புரத்திலும் தொற்று அதிகரித்துள்ளது. அந்த இடத்திலும் மத்திய குழுவினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரி கூறினார்.

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு லேசான பாதிப்பு இருப்பதால் அவர்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அடையாறு மண்டலத்தில் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு மருத்துவ பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.