எதிர்பாராதவற்றையும் எதிர்கொள்ளத் தயங்க வேண்டாம்
வளமான பின்னணியில் பிறந்தவர் கஸ்தூர்பா. கணவரோ இங்கிலாந்திலிருந்து பாரிஸ்டராகத் திரும்பியவர். மரபுவழிக் குடும்பத்தை நடத்தும் வசதியான இல்லத்தரசியாக வாழ்க்கையைத்தான் நடத்தப் போகிறோம் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்திருக்கவே வாய்ப்பு அதிகம். எனினும்கூட அதற்கு நேர்மாறான வாழ்வு அமைந்தபோது அவர் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டார்.
ஆதரவை அழுத்தமாக வெளிப்படுத்துங்கள்
தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டபோது காந்திஜி அதற்கு எதிராக மாபெரும் அளவில் தன் எதிர்ப்பைக் காட்டினார். கஸ்தூர்பா
“நீங்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள்’’ என்றபடி குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் தானும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். பல பெண்களையும் அதில் கலந்து கொள்ள வைத்தார். சிறைக்குச் செல்லத் தயங்கவில்லை (அவரது இறுதி நாள்கள்கூட சிறையில்தான் கழிந்தன). சிறை வாழ்க்கை தரக்கூடிய துயரங்கள் அவரை மாற்றவே இல்லை.
சமயோசித உணர்வு தேவை
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் பிரபலமாகிக் கொண்டிருந்தபோது மும்பையில் சிவாஜி பூங்காவில் காந்திஜி பேசுவதாக இருந்தது. ‘தான் கைது செய்யப்படுவோம்’ என்று யூகித்த காந்திஜி “என்னைக் கைது செய்தால் நீ இந்த இடத்திலிருந்து மக்களிடம் உரையாற்ற வேண்டும்’’ என்றார். இதைக் கேட்ட கஸ்தூர்பா புன்னகைத்தபடி, சுசீலா நய்யார் என்பவரிடம் எதையோ பேசினார். காந்திஜி கேட்டபோது “காவல்துறை என்னையும் கைது செய்யும். அப்போது எனக்குப் பதிலாக சுசீலா நய்யார் பேச வேண்டுமென்று விரும்பி, என்னென்ன பேச வேண்டும் என்பதை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்’’ என்றாராம்.
துணிவை வெளிப்படுத்துங்கள்
இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றபோது ஒரு கட்டத்தில் பேச்சு வார்த்தைக்கு வைஸ்ராய் காந்திஜியை சிம்லாவுக்கு அழைத்தார். அப்போது கஸ்தூர்பாவும் கணவருடன் சென்றார். வைஸ்ராயின் மனைவி தன் கைப்பட அதற்கான அழைப்பிதழை கஸ்தூர்பா காந்திக்கு அனுப்பினார். அப்படி ஓர் அழைப்பு இந்தியத் தலைவர் ஒருவரின் மனைவிக்கு அனுப்பப்பட்டது அதுவே முதல் முறை.
“கைத்தறி நூலை எனக்குக் கொஞ்சம் அனுப்புங்கள். இந்திய மக்களோடு நெருக்கமாக இருக்க நான் விரும்புகிறேன்’’ என்றார் வெலிங்டன் சீமாட்டி.
“தாராளமாக அனுப்புகிறேன். ஆனால் இந்தியர்களோடு நெருக்கமாக இருக்க வேண்டுமென்றால் இப்படி மலைவாசஸ்தலத்தில் வாழ்வதை விடுத்துக் கீழே வாருங்கள்’’ என்றார் கஸ்தூர்பா பளிச்சென்று.
அர்ப்பணிப்பு உணர்வு அனைத்திலும் மேலானது
அறுபத்தி இரண்டு வருடங்கள் காந்திஜியுடன் பலவித மேடு, பள்ளங்கள் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்தார் கஸ்தூர்பா. ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடலில் ஓர் உண்மையான வைஷ்ணவர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் கஸ்தூர்பா’ என்று காந்திஜியே குறிப்பிட்டிருக்கிறார்.