டெல்லி: கொரோனா நோயாளி இறந்தால் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க ஒன்றிய சுகாதாரத்துறை காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னதாக விசாரித்து உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதாவது, கொரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை எளிதாக்குவதற்கு மாநில சட்ட சேவை ஆணையத்தின் உறுப்பினர், செயலாளருடன் ஒருங்கிணைந்து செயல்பட அர்ப்பணிப்புடன் செயல்படக் கூடிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.இறந்தவர்களின் பெயர், முகவரி, இறப்பு சான்றிதழ் என முழு விவரத்தையும் ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட சட்டசேவை ஆணையத்துக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறினால் இந்த விவகாரம் நீதிமன்றத்தால் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களை மாநில சட்ட சேவை ஆணையத்தினர் அணுகி, இழப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்வதை உறுதி செய்வார்கள் என அந்த உத்தரவில் கூறப்பட்டது. இந்தநிலையில், தற்போது ஒன்றிய சுகாதாரத்துறை காலக்கெடு நிர்ணயம் செய்து அதனை வெளியிட்டுள்ளது. மார்ச் 20-ம் தேதிக்கு முன்னதாக உயிரிழந்தவர்களுக்கு, மார்ச் 24-ம் தேதி முதல் 60 நாட்களுக்குள் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதனையடுத்து வரும் நாட்களில் கொரோனாவால் இறந்தால் 90 நாட்களுக்குள் இழப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ஒன்றிய சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.