புதுடெல்லி: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி, தனியார் மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் நேற்று தொடங்கியது. 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக, பூஸ்டர் தடுப்பூசி செலுத்த, ஒருவருக்கு ஏற்கெனவே 2 டோஸ்களில் செலுத்தப்பட்ட அதே மருந்தை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
தனியார் மருந்துவமனைகளில் ரூ.225-க்கு கரோனா தடுப்பூசியை விற்கவும், அதை செலுத்துவதற்கு ரூ.150 வரை கட்டணம் வசூலிக்க வும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மையங் களி்ல், கரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தடுப்பூசிகள் இதுவரை
நாட்டில் சுகாதாரப் பணியாளர் களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்தாண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்தாண்டு பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது.
3-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதை கடந்த, இணை நோய் உள்ள வர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்தாண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கியது.
மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப் பூசி செலுத்தும் பணி கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்தாண்டு மே 1-ம் தேதி தொடங்கியது.இந்நிலையில், 15 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 10-ம் தேதி தொடங்கியது. 12 வயது முதல் -14 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கியது.
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை, நேற்று காலை 7 மணி வரை 185.70 கோடியை தாண்டியது.
– பிடிஐ