ஸ்ரீநகர்: கடந்த 4-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள்மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை மாநில போலீஸார் தீவிரமாக தேடினர். பொதுமக்கள், உளவாளிகள் மூலம் துப்பு கிடைக்காத நிலையில் தொழில்நுட்பத்தின் உதவியை போலீஸார் நாடினர்.
தாக்குதல் நடந்தபோது சம்பவ இடத்தில் கிடைத்த செல்போன் சிக்னல்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் இருந்து சந்தேகத்துக்குரிய நபர்களின் செல்போன் உரையாடல்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. இதன் மூலம் 6 நாட்களில் தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மக்கள் நெரிசல் மிகுந்த ஸ்ரீநகரின் கய்யாம் பகுதியில் உள்ள வீட்டில் தீவிரவாதிகள் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த வீட்டை நேற்று அதிகாலை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸாரை குறிவைத்து தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்து கொண்ட போலீஸார் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த என்கவுன்ட்டரில் லஷ்கர் தொய்பா கமாண்டர் அடில் பாய்,முபாசிர் பாய் ஆகியோர் உயிரிழந்தனர். இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். பாதுகாப்பு படை வீரர்களில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் எஸ்எஸ்பி ராகேஷ் பல்வால் கூறும்போது, “தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீவிரவாதிகளை 6நாட்களில் கண்டறிந்து அழித்துள்ளோம். இது எங்களது சிறப்பானபுலன்விசாரணைகளில் ஒன்றாகும்” என்று தெரிவித்தார்.
ஐஜிபி எச்சரிக்கை
மாநில ஐஜிபி விஜய் குமார் கூறும்போது, “பாதுகாப்பு படை வீரர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் தப்பிக்க முடியாது. அவர்கள் யாராக இருந்தாலும் அழிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்” என்று எச்சரித்தார்.