பெங்களூரு : ”சமீபத்திய பிரச்னைகள் காரணமாக, பெங்களூரை விட்டு எந்த நிறுவனமும் வெளியேறவில்லை,” என ஐ.டி., – பி.டி., துறை எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.கர்நாடகா பள்ளி கல்லுாரிகளில், ‘ஹிஜாப்’ எனப்படும் முஸ்லிம் பெண்களின் ஆடை அணிவதில் மோதல்; கோவில் திருவிழாக்களில் முஸ்லிம்களுக்கு கடை வைக்க எதிர்ப்பு; ‘ஹலால்’ எனப்படும்
முஸ்லிம் முறைப்படி இறைச்சி வெட்டுவதற்கு கண்டனம் என சமீப காலமாக குழப்பங்கள் வலுத்து வருகின்றன.பா.ஜ., ஆட்சி மாநிலத்தில் நடப்பதால் தான், மதவாத சக்திகள் அதிகரித்துள்ளன என சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் கருதுகின்றனர்.’பயோகான்’ உயிரி தொழில்நுட்ப நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் ஷா கூறுகையில், ”மாநிலத்தில் வகுப்புவாதம் அதிகரித்தால், ஐ.டி., – பி.டி., துறைகளில் நம் உலகளாவிய தலைமையை அழித்துவிடும். வகுப்புவாத சம்பவங்களை அனுமதிக்க கூடாது’ என, முதல்வரிடம் கோரினார்.இதற்கு பதிலளிக்கும் வகையில், ஐ.டி., – பி.டி., துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா கூறுகையில், ‘சமீபத்திய சம்பவங்களால் பெங்களூரை விட்டு எந்த நிறுவனமும் வெளியேறவில்லை. உலக அளவில் பெங்களூரு நகரின் நற்பெயரை இழந்து விட்டது என கூறுவது கற்பனையே’ என்றார்.இந்நிலையில், பெங்களூரிலுள்ள கர்நாடகா உத்யோக் மித்ரா நிர்வாக இயக்குனர் தொட்ட பசவராஜு நேற்று கூறியதாவது:கர்நாடகத்தில் முதலீடு செய்வோர் வெளியேறுவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. அனைத்து துறைகளிலும் மாநிலத்தில் முதலீடுகள் அதிகரிக்கிறது.
உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.தமிழகமும், ஆந்திராவும் இலவச நிலம் வழங்கினாலும் கர்நாடகாவில் தொழிற்சாலைகள் துவங்கவே ஆர்வமுடன் பலரும் வருகின்றனர்.ஒவ்வொரு தொழிலதிபரும் நாட்டிலுள்ள மூன்று முதல் நான்கு மாநிலங்களை பார்வையிடுவர். இறுதியில் அவர்கள் மீண்டும் கர்நாடகாவிற்கு வருகின்றனர். பெரிய முதலீடுகள் வருவதால், பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மாநில அரசு வாங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement