பெங்களூரு : பெங்களூரை அபிவிருத்தி செய்யும் நோக்கில், சொத்து வரி வசூலில் பெங்களூரு மாநகராட்சி வழியை பின்பற்ற, பி.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.பெங்களூரில் அபிவிருத்தி திட்டங்களை, சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில், 1976ல் பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையம் செயலில் இறங்கியது.
இதுவரை 63 க்கும் மேற்பட்ட லே — அவுட்களை, அபிவிருத்தி செய்துள்ளது. 46 ஆண்டுகளாக அமைத்த லே — அவுட்கள், அதன் நிர்வகிப்புக்கு உட்பட்ட சொத்துகளுக்கு, நிதியாண்டின் எந்த தினத்திலாவது சொத்து வரி செலுத்துவதற்கு வாய்ப்பளித்தது.வரி பாக்கி வைத்துள்ளோரிடம் அபராதம் அல்லது வட்டி விதிப்பது போன்ற நடவடிக்கை எடுத்ததில்லை. நிர்ணயித்த காலத்துக்குள் சொத்து வரி செலுத்தியோருக்கு, தள்ளுபடி சலுகை அளித்ததில்லை.பெங்களூரு மாநகராட்சி எல்லையில் 18 லட்சம் சொத்துகள் உள்ளன. நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் 30க்குள் சொத்து வரி செலுத்தினால், வரி தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.மே மாதம் செலுத்தினால், வரி தொகையை மட்டும் செலுத்தலாம். வட்டி விதிக்கப்படாது. ஜூன் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலத்தில் வரி செலுத்துவோருக்கு, 2 சதவீதம் வட்டி விதிக்கப்படும்.ஓராண்டுக்கும் மேலாக வரி பாக்கி வைத்திருந்தால், வட்டிக்கு வட்டி விதித்து வரி வசூலிக்கப்படும்.வட்டி செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில், பலரும் ஏப்ரல் 30 க்குள் சொத்து வரியை செலுத்தி, மாநகராட்சியின் சலுகையை பெறுகின்றனர். வரி வருவாயும் அதிகரிக்கிறது.தற்போது மாநகராட்சி வழியை பின்பற்றி, சொத்துதாரர்களுக்கு தள்ளுபடி சலுகை வழங்க பி.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.அதிகாரி ஒருவர் கூறியதாவது:பி.டி.ஏ., எல்லையில், 1.05 லட்சம் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளுக்கு, 2021 — 22ல் 30 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது. 2022 — 23ல் சொத்து வரி வசூலிக்க, மாநகராட்சியை போன்ற நடைமுறையை செயல்படுத்தும்படி அரசு உத்தரவிட்டிருந்தது.இதன்படி புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தனி இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அந்த இணையதளம் செயல்படும்.நிர்ணயித்த காலத்துக்குள், பி.டி.ஏ.,வுக்கு சொத்து வரி செலுத்தாதோருக்கு, 10 சதவீதம் வட்டி விதிக்கப்படும். நடப்பாண்டு 34 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement