தெலங்கானாவில் தேங்கிக் கிடக்கும் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்திர மோடிக்கு 24 மணிநேர கெடு விதித்துள்ளார்.
தெலங்கானாவில் விவசாயிகள் அறுவடை செய்து பதப்படுத்தியுள்ள 15 லட்சம் டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியிருக்கின்றன. இதனால் அம்மாநில விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறபடுகிறது.
இதன்பேரில், இந்த அரிசியை உரிய விலை கொடுத்து மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஒரு மாதத்துக்கும் மேலாக வலியுறுத்தி வந்தார். ஆனால், இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு, பதப்படுத்தப்படாத சாதாரண அரிசியை மட்டுமே மத்திய அரசு கொள்முதல் செய்து உணவுக் கழகத்துக்கு வழங்கி வருவதாக தெரிவித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் மத்திய அரசை கண்டித்து தனது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் பிரதிநிதிகளுடன் டெல்லியில் இன்று ஒருநாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள தெலங்கானா பவனில் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதில் கே. சந்திரசேகர ராவ் பேசியதாவது:
தெலங்கானாவில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசி தேக்கமடைந்து கிடக்கிறது. இவையாவும் எங்கள் விவசாயிகளின் கடுமையான உழைப்பால் பெறப்பட்டது. இந்த அரிசியை கொள்முதல் செய்யுமாறு மத்திய அரசிடம் பல முறை வலியுறுத்தி விட்டோம். ஆனால் அதற்கு மத்திய அரசு உடன்பட மறுக்கிறது. சாதாரண அரிசி மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். அப்படியென்றால், புழுங்கல் அரிசியை தயாரிக்கும் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தான் நிற்க வேண்டுமா? நான் மறுபடியும் கைகளைக் கட்டிக்கொண்டு பிரதமரையும், உணவுத் துறை அமைச்சரையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
தயவுசெய்து, எங்கள் மாநிலத்தில் தேக்கமடைந்துள்ள புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யுங்கள். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் 24 மணிநேரம் கெடு விதிக்கிறேன். அதற்குள் இந்த விவகாரத்தில் தெலங்கானா விவசாயிகளுக்கு சாதகமான பதில் வர வேண்டும். இல்லையென்றால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். புழுங்கல் அரிசியையும் கொள்முதல் செய்ய வழிவகை செய்யும் புதிய வேளாண் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதற்கு நாங்களும் எங்கள் பங்களிப்பை தருவோம். இதனை செய்ய தவறினால், நீங்கள் பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவீர்கள்.
பின்னர் புதிய அரசு அமைந்து, விவசாயிகளுக்கு நன்மை தரும் வேளாண் கொள்கையை உருவாக்க வேண்டிய சூழல் வந்துவிடும். விவசாயிகளை சாதாரணமாக நினைக்காதீர்கள். அவர்கள் நினைத்தால் உங்கள் ஆட்சியை எளிதில் கவிழ்க்க முடியும். இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM