30 குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த மகேஷ் பாபு
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. சத்தமின்றி பல சமூக பணிகளையும் செய்து வருகிறர். தனது தந்தை கிருஷ்ணாவின் பெயரில் மகேஷ்பாபு நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் இந்த பணிகளை செய்து வருகிறார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு மருத்துவ பணிகள் செய்வதோடு இரண்டு மாநிலங்களிலும் பல கிராமங்களை தத்தெடுத்துள்ளார்.
இந்த நிலையில் உலக சுகாதார தினத்தையொட்டி 30 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இந்த தகவல் அவர் மனைவி நம்ரதா ஷிரோத்கர் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.
“உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, 30 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிகழ்வை ஆளுநர் ஸ்ரீ பிஸ்வபூசன் ஹரிசந்தன் பாராட்டினார். தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிய ஆந்திர மருத்துவமனை மருத்துவக்குழுவுக்கு நன்றிகள்” என்று நம்ரதா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு மகேஷ்பாபு நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.