ஆதி இசை தமிழ் இசையாகத்தான் இருந்திட வேண்டும் என்றும், தமிழிசைக்கான உரிய முக்கியத்துத்தை அரசு வழங்கும் என்றும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
உலகின் ஆதி இசை, தமிழ் இசை என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இசைப் பள்ளி தொடங்கினால், தமிழிசை உலகம் முழுவதும் சென்றடையும் என்று சட்டப்பேரவையில் பா.ம.க எம்.எல்.ஏ. ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தொழில், தமிழ் வளர்ச்சி & தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ”தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரிலான இசைப் பல்கலைக்கழகம் உட்பட 17 மாவட்டங்களில் இசைப்பள்ளி, 4 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தேவையைப் பொருத்து வரும் காலங்களில் இசைப் பள்ளி தொடங்கப்படும். ஆதி இசை, தமிழ் இசையாகத் தான் இருந்திட வேண்டும். தமிழிசைக்கான உரிய முக்கியத்துத்தை அரசு வழங்கும்” என்றார்.
விராலிமலையில் புதிய இசைப்பள்ளியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ”விராலிமலையில் சாதகமான சூழல் இருந்தால் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று அங்கு இசைப்பள்ளி தொடங்கப்படும் என்றும், நலிவுற்ற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM