மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை (இறுதி மூச்சு இருக்கும் வரை) வழங்கி மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி 10 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
அதில், இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள், தொலைக்காட்சி பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும், நிபுணர்களும்தான் சாட்சியாக விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளோம். எனவே தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்று விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.