ராமநவமியின் போது விடுதியில் அசைவ உணவு பரிமாற்றம் டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மோதல்: ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு

புதுடெல்லி: ராமநவமியின்போது விடுதியில் அசைவ உணவு வழங்கிய விவகாரத்தில் டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் இடதுசாரி மாணவர்கள் மற்றும் ஏபிவிபி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயடைந்தனர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ராமநவமியை முன்னிட்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தின்  காவேரி விடுதியில் மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஏபிவிபி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சைவ உணவாக மாற்றிக்கோரி விடுதி ஊழியர்களை தாக்கி, அங்கிருந்த மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இடதுசாரி மாணவர்களும், ஏபிவிபி மாணவர்களும் ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கிக்கொண்டனர். இதில் சிலருக்கு ரத்தம் கொட்டியது. சுமார் 6 மாணவர்கள் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் பதற்றமான  சூழல் ஏற்பட்டது. இதனால், பல்கலை வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் பல்கலைக்கழகத்தின் காவலர்களே பாதுகாப்பு பணியை  மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக, இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அதன்பேரில், அடையாளம் தெரியாக ஏபிவிபி மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாணவர்கள் மோதல் சம்பவத்தை நிர்வாகம் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. துணை வேந்தர், தாளாளர் மற்றும் பிற அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று மாணவர்களை சந்தித்தனர். வளாகத்தில் எந்த வன்முறைக்கும் இடமில்லை. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏபிவிபி மாணவர்களை கண்டித்து ஜேஎன்யூ மாணவர்கள் டெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். * வெறுப்பு, வன்முறை நாட்டை பலவீனப்படுத்தும்: ராகுல் வேதனைகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வெறுப்பு, வன்முறை மற்றும் புறக்கணிப்பு ஆகியவை நமது அன்பான நாட்டை பலவீனப்படுத்துகிறது. முன்னேற்றத்திற்கான பாதையானது சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. நீதியை உள்ளடக்கிய இந்தியாவை பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம்’ என்று தெரிவித்துள்ளார்.* கலவரத்துக்கு ராகுல்தான் காரணம்பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘சமீபத்தில் பேசிய ராகுல்காந்தி, பாஜ தலைவருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லையென்றால் அவர் எப்படி ராமர் மீது நம்பிக்கை வைக்கமுடியும்? என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கள் மக்களை தூண்டுவதாகவும், ராமரை கேலி செய்வதாகவும் இருக்கின்றது. ராமர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை ராகுல்காந்தியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.’  என்றார்.  * சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பாஜகாங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபஸ் கூறுகையில், ‘பாஜ சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து சர்வாதிகார மற்றும் பெரும்பான்மை ஆட்சியை கொண்டுவர விரும்புகிறது. எனவே அதன் தொண்டர்கள் இதுபோன்று செயல்படுகின்றனர்’ என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி பினாய் விஸ்வம் தனது டிவிட்டர் பதிவில்,‘பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தை நாசமாக்குவதற்கான ஆர்எஸ்எஸ்சின் திட்டத்தை காட்டுகின்றது. பல்கலைக்கழகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். பல்கலைக்கழகத்தின் மீதான உங்கள் விளையாட்டை கைவிடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.* குஜராத், ஜார்க்கண்ட் ம.பி.யிலும் வன்முறைகுஜராத்தின் அனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் நகரில் ராமநவமி ஊர்வலத்தின்போது கற்கள் வீசப்பட்டதால், வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ஹிம்மத்நகரிலும் இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது ஹிர்லி பகுதியில் கற்கள் வீசப்பட்டதால் கலவரம் வெடித்தது. இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒருவர்மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது 10 இருசக்கர வாகனங்கள், மற்றும் வேன்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்தனர். மத்தியப்பிரதேசத்தில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் இரு பிரிவை சேர்ந்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 6 போலீசார் உட்பட மொத்தம் 24 பேர் இதில் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் கார்கோனில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று தொடங்க இருந்த 8ம் வகுப்பு மற்றும் முதுகலை பிரிவு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.* ஏபிவிபி மறுப்புஅகில பாரதிய வித்யார்த்தி பரிசத் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தலைவர் ரோகித் குமார் கூறுகையில்,‘7 நாட்களுக்கு முன் நடந்த காவேரி விடுதி கமிட்டியின் பொதுக்குழு கூட்டத்தில் ராமநவமியன்று அசைவ உணவு சமைக்ககூடாது என்று ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஒப்புக்கொண்டனர். ஆனால் ராமநவமியன்று ஊர்வலம் முடியும் தருவாயில் கற்கள், லத்தி உள்ளிட்டவற்றுடன் வந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.