வாஷிங்டன்:
ரஷியா அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸ் நவால்னி இரண்டரை ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, அரசை விமர்சிப்பவர்கள் நாடு முழுவதிலும் தடுத்து வைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சமூக சேவகரும், எதிர்க்கட்சியை சேர்ந்தவருமான விளாடிமிர் காரா முர்சா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், பிரபல சமூக சேவகரான விளாடிமிர் காரா முர்சா மாஸ்கோவில் ரஷிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந்த சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.