திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு, சீஷெல்ஸ் தலைநகர் விக்டோரியாவில் உள்ள, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 4 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்ஸில் குடியேறிய வெளிநாட்டு வாழ் இந்தியரான ராமகிருஷ்ண பிள்ளை, அந்நாட்டின் தலைநகரான விக்டோரியாவில் உள்ள, 4 ஏக்கர் நிலத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். ஆப்ரிக்கர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சீஷெல்ஸ் நகரில் ஹிந்துக்கள் அதிக அளவில் உள்ளனர். அங்கு ஏற்கனவே விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது, ஏராளமான சுற்றுலாப் பயணியரை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், தற்போது திருமலைக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஏக்கர் நிலத்தில் ”வெங்கடேஸ்வரா பெருமாள் கோயிலைக் கட்ட வேண்டும்,” என ராமகிருஷ்ண பிள்ளை தேவஸ்தான கூடுதல் செயலதிகாரி தர்மா ரெட்டியிடம் கேட்டுள்ளார்.
இது பற்றி தர்மா ரெட்டி கூறுகையில், ”வெளிநாட்டிலிருந்து நில நன்கொடை பெறுவது இதுவே முதல் முறை. அங்கு ஏழுமலையான் கோயில் கட்டுவது குறித்து அறங்காவலர் குழுவில் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்றார்.
Advertisement