சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 மாவட்டங்களில் ரூ.18.42 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசுவெளியிட்ட செய்திக் குறிப்பு:
பல்வேறு திட்டங்கள்
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.18.42 கோடியில் புதிதாக 5 ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இக்கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலர் இறையன்பு, தாட்கோ தலைவர் உ.மதிவாணன், துறை செயலர் க.மணிவாசன், ஆணையர் சோ.மதுமதி, தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் ச.அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.