ராஜஸ்தான் மாநிலம் டோங் பகுதியில் காட்டுக்குள் மலம் கழிக்கச் சென்ற 11 வயது சிறுமி தெருநாய்களின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் டோங்கின் நிவாய் உட்பிரிவில் அனிஷா என்ற 11 வயது சிறுமி காலை 6 மணியளவில் மலம் கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். காலை 7 மணியாகியும் அனிஷா வீடு திரும்பவில்லை. ஒரு மணி நேரமாகியும் அனிஷா வீடு திரும்பாததால், குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று சிறுமியை தேடினர். அப்போது சிறுமியின் உடலை சுற்றி ஆறு முதல் ஏழு தெருநாய்கள் நிற்பதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். குடும்ப உறுப்பினர்களின் கூச்சலிட்டு நாய்களை விரட்ட முயன்றனர். அந்த சப்தம் கேட்டு கிராம மக்கள் பலர் அங்கு வந்து நாய்கள் மீது கற்களை வீசி தாக்கினர்.
நாய்களை விரட்டியதும் ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிஷாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக ஊர்மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணைக்காக தடயவியல் அறிஞர்கள் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அனிஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதே நேரத்தில் காவல்துறையினர் சில மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய அனிஷாவின் தந்தை லால் கான் பஞ்சாரா, “நாய்களால் என் மகளையே இழந்துவிட்டேன். தெருநாய்கள் கூட்டமாக என் மகளை சாப்பிடுவதை பார்த்தேன். தெருநாய்களால் தாக்கப்பட்டதால் என் மகள் இறந்துவிட்டாள்.” என்று கண்ணீர் மல்க கூறினார். அனிஷாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து டோங்க் காவல்துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM