கீவ்: உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட காலமாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரஷ்யா, அந்நகரை முற்றிலுமாக கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 7வது வாரமாக நீடிக்கும் சூழலில் மரியுபோல் நகரில் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடி வரும் உக்ரைன் ரானுவத்தின் 36வது மரைன் பிரிகேட் தனது பேஸ்புக் பக்கத்தில், இன்று தான் எங்கள் போராட்டத்தின் கடைசி நாள். எல்லா ஆயுதங்களும் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. இதற்குப் பிறகு எங்களில் சிலருக்கு சாவும், சிலருக்கு சிறையும் காத்திருக்கிறது. நாங்கள் முற்றிலுமாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளோம் என்று உருக்கமாகப் பதிவிடுள்ளது. இதனால், நீண்ட நாள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான மரியுபோல் முழுவதுமாக ரஷ்யாவிடம் வீழ்வது உறுதியாகியுள்ளது.
மரியுபோலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் உள்ள க்ரிமியாவின் படைகளையும், டான்பாஸின் டானட்ஸ்க், லுஹான்ஸ்கில் உள்ள பிரிவினைவாதிகளையும் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
ரசாயன குண்டுகள்; ஜெலன்ஸ்கி கவலை.. இதற்கிடையில் ரஷ்யா தங்கள் நாட்டுக்கு எதிராக ரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மரியுபோல் மேயர் பெட்ரோ ஆண்ட்ரி, தனது நகரில் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதாக டெலிகிராம் செயலியில் தெரிவித்துள்ளார். இதனால் உலக நாடுகள் தலையிட்டு ரஷ்யா ரசாயன குண்டுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.
தென் கொரிய நாட்டிடம் அவர் ஆயுத உதவி கோரியுள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உதவிவரும் நிலையில் தற்போது ஆசிய நாடான தென் கொரியாவின் உதவிக்கரத்தைக் கோரியுள்ளார் ஜெலன்ஸ்கி. உக்ரைனின் கீவ் நகருக்கு அருகேயுள்ள போரோடினியாக் பகுதியில் 1200 சடலங்கள் கண்டெடுகப்பட்டுள்ளதாகவும், மரியுபோலில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.
பாலியல் பலாத்காரங்கள்..ஐ.நா கவலை.. ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல பகுதிகளிலும் பெண்கள், பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மூத்த அதிகாரி ஒருவர் புகார் கூறியுள்ளார். ஐ.நா.வின் ஹாட்லைன் தொலைபேசிகளுக்கு உக்ரைனில் இருந்து பாலியல் வன்கொடுமை புகார்கள் வருவதாகக் கூறியுள்ளார். வன்முறையும், பாலியல் வன்கொடுமையும் போர் உத்தியாக ரஷ்யப் படைகளால் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.