பாகிஸ்தானில்
இம்ரான் கான்
தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதையடுத்து, அவரது அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர்
ஷெபாஸ் ஷெரீப்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஷெபாஸ் ஷெரீப் ஆற்றிய முதல் உரையின் போது, துரதிர்ஷ்டவசமாக, கடந்த காலங்களில் இந்தியாவுடனான பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த முடியவில்லை. இந்தியாவுடன் நல்ல உறவையே விரும்புகிறோம். ஆனால், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அமைதியை விவாதிக்க முடியாது என்றார்.
காஷ்மீர் பிரச்சினையில் இம்ரான் கான் துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம் சாட்டிய அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வேலையின்மை, சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார சவால்கள் உள்ளன. இருநாடுகள் உடனான மோதலை முடிவுக்கு கொண்டுவந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம், மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம். காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கேற்றவாறு காஷ்மீர் பிரச்சினையை முடிவு செய்வோம் என்றும் பேசினார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு
பிரதமர் மோடி
வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அமைதியை உறுதி செய்யாமல் வளர்ச்சி காண முடியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மியான் முகமது ஷெபாஸ் ஷெரீபுக்கு எனது வாழ்த்துகள். பாகிஸ்தான் பயங்கரவாதம் இல்லாத பிராந்தியமாகவும் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலைக்கும் பகுதியாக இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அமைதியிருந்தால் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொண்டு மக்களின் நலனையும் வளத்தையும் உறுதி செய்யலாம்.” என்று பதிவிட்டுள்ளார்.