ஜகார்தா: எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் தேர்தலை தள்ளிவைக்க அரசியல் சதி நடப்பதாகவும் கூறி இந்தோனேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். நேற்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போலீஸார் கட்டுப்படுத்தினர்.
தலைநகர் ஜகார்தாவில் உள்ள நாடாளுமன்ற பகுதி மட்டுமல்லாமல் தெற்கு சுலேவேசி, மேற்கு ஜாவா உள்ளிட்டப் பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமையல் எரிவாயு விலை உயர்வு.. இந்தோனேசியாவில் அண்மைக்காலமாகவே சமையல் எரிவாயு விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் 92 டாலராக இருந்த கச்சா எண்ணெய் இன்று ஒரு பீப்பாய் 120 டாலராக உள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க இறக்குமதி எண்ணெய்யை நம்பியிருக்கும் இந்தோனேசியா பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் 2014 முதல் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியன மானியத்துடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் அரசு மானியத்தில் கைவைத்துள்ளது. இதனால், சமையல் எரிவாயு விலை, எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனைக் கண்டித்தே மாணவர்கள் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாது அங்கு தற்போது அதிபராக உள்ள ஜோகோ விடோடோவின் பதவிக் காலத்தை 2024 தேர்தலை நடத்தாமலேயே நீட்டிக்க அரசியல் சதி நடப்பதாகவும் மாணவர்கள் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்தோனேசிய அரசியல் வரலாற்றில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பார்க்கப்படுகின்றனர். காரணம் 1989 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் அதிபராக இருந்த சுகர்தோவின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர அப்போதைய பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.