ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீது வெடிகுண்டு தாக்குதல், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் உக்ரேனிய குடிமக்களைப் படுகொலை செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ரஷ்ய ராணுவத்தின் மீது உக்ரைன் கூறிவந்தது. இதுதொடர்பாக ஐ.நா சபையில் பலமுறை விவாதிக்கப்பட்டும் ரஷ்யா அதனைத் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில் பாலியல் வன்கொடுமையை ரஷ்ய ராணுவம் ஓர் போர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என ஐ.நாவில் ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய La Strada-Ukraine எனும் மனித உரிமை அமைப்பின் தலைவர் Kateryna Cherepakha, “சிறுமிகள் உட்பட 12 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக பதிவான 9 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ரஷ்ய வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. உக்ரைனில் நிகழ்ந்துவரும் போரில், பாலியல் வன்கொடுமையை ரஷ்ய ராணுவம் ஓர் போர் ஆயுதமாக பயன்படுத்துவதை நாங்களும் அறிவோம். அதே சமயம் எங்களின் குரலையும் நீங்கள்(ஐ.நா) கேட்க வேண்டும்” என கூறினார்.
ஐ.நாவில் உக்ரைனின் இந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்த ரஷ்யாவுக்கான ஐ.நாவின் துணை தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி, “நாங்கள் ஏற்கெனவே பலமுறை கூறியது போல, உக்ரைன் மக்களின் மீது ரஷ்யப் படை ஒருபோதும் தாக்குதல் நடத்தாது. உக்ரைனின் இந்த குற்றச்சாட்டு, வேண்டுமென்றே ரஷ்யா வீரர்களை சுயநலவாதிகளாகவும், பாலியல் வன்கொடுமைவாதிகளாகவும் காட்டுவதற்கான செயல்” என கூறினார்.