அரசியலில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு அவமானங்களை சந்தித்து இன்று அமைச்சராகியிருக்கிறார்
நடிகை ரோஜா
. ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்
கட்சி பெருபான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வராக
ஜெகன் மோகன் ரெட்டி
பதவியேற்றுக்கொண்டார்.
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவரும், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவருமான நடிகை ரோஜாவுக்கு ஜெகன்மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தலைவர் என்ற பதவி நடிகை ரோஜாவுக்கு கொடுக்கப்பட்டது. அதுவும் பின்னர் பறிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆந்திர மாநில அமைச்சரவை கடந்த 10ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதில், புதிதாக 14 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டர். அவர்களில் முக்கியமானவர் நடிகை ரோஜா. அவருக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற பிறகு, மேடையில் இருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் காலை தொட்டு கும்பிட்டு, கையை முத்தமிட்டு தனது நன்றியை வெளிப்படுத்தினார் ஜெகன் அண்ணாவின் நம்பிக்கைக்குரிய சகோதரி ரோஜா.
அமைச்சராக பதவியேற்ற ரோஜா, “எனக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை. தெலுங்கு தேசம் கட்சி என்னை சட்டமன்றத்துக்குள் நுழையவே விரும்பவில்லை. ஆனால், என்னை இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக ஆக்கிய ஜெகன் மோகன் என் மீதுள்ள நம்பிக்கையால் தற்போது அமைச்சராக்கியுள்ளார். எந்தப் பதவி வகித்தாலும் அதில் எனது திறமையை நிரூபிக்க முனைவேன். இனி மக்கள் பணியாற்றவே நேரம் தேவைப்படும் என்பதால் இனி சினிமாவிலும் தொலைக் காட்சியிலும் நடிப்பதை நிறுத்திவிட முடிவு செய்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆக்ரோஷமான அரசியல், சர்ச்சைக்குரிய அறிக்கைகளுக்கு பெயர் போன ரோஜாவுக்கு இந்த உச்சத்தை அடைய சுமார் 20 ஆண்டுகள் ஆகியுள்ளது, இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அவமானங்களையும், பழிச்சொற்களையும் கடந்துதான் இன்று அமைச்சராகியுள்ளார். ஆந்திராவில் பிறந்து தமிழகத்து மருமகளான ரோஜா, 1991ஆம் ஆண்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். மிகக்குறுகிய காலத்தில் திரைத்துறையில் உச்சம் தொட்ட ரோஜா, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மமூட்டி என உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டவர்.
பிஸியான ஆர்டிஸ்ட்டாக வலம் வந்த ரோஜாவின் அரசியல் வாழ்க்கை 2014வரையிலுமே மோசமானதாகத்தான் இருந்தது. ராசியில்லாதவர்களை குறிக்க பயன்படும் சொல்லான ‘
அயர்ன் லெக்
’ என அரசியல் வட்டாரங்கள் ரோஜாவை குறிப்பிடத் தொடங்கின. அவரது அரசியல் வாழ்க்கையைப் பாதித்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் அவர் அந்த சமயத்தில் சார்ந்திருந்த சொந்த கட்சியே அவருக்கு எதிராக திரும்பியது.
தொடக்க காலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில்தான் ரோஜா இருந்தார். அதாவது 1998ஆம் ஆண்டில் அக்கட்சியில் சேர்ந்த ரோஜாவின் மவுஸை அறிந்த அக்கட்சி, மகளிர் அணித் தலைவியாக அவரை நியமித்தது. 2004 தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் ரோஜாவும், தெலுங்கு தேசம் கட்சியும் தோல்வியடைந்தது. அப்போதிருந்து, அவர் ராசியற்றவராக கருதப்பட்டார். 2009ஆம் ஆண்டு தேர்தலில் சந்திரகிரி தொகுதியிலும் தோல்வி. சொந்த கட்சியினரே உள்ளடி வேலை பார்த்ததால் ரோஜாவுக்கு சோகமே மிஞ்சியது. இதனால், சொந்த கட்சியினரால் திட்டமிடப்பட்டு வேண்டுமென்றே ஓரங்கட்டப்பட்டார்.
இதனால், ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி தலைமையில் காங்கிரஸில் சேர முடிவெடுத்த போது ஹெலிகாப்டர் விபத்தில் அவரும் இறந்துபோனார். இதையடுத்து, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஆரம்பித்த ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் 2009 ஆம் ஆண்டில் இணைந்து அரசியலில் தனது 2ஆவது இன்னிங்க்ஸை தொடங்கினார். ஆனால், அரசியல் சூழ்ச்சிகளால் ஜெகன் மோகன் மீது பாய்ந்த சொத்துக் குவிப்பு வழக்குக்கும் ரோஜாவின் (‘அயர்ன் லெக்’) ராசியே காரணம் என்று சிலர் கிளப்பிவிட்டனர். ஆனாலும் ஜெகனின் நம்பிக்கைக்குரிய சகோதரியாக வலம் வந்த ரோஜாவுக்கு, மீண்டும் நகரி தொகுதியில் 2014ஆம் ஆண்டு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், அந்த தொகுதியில் ஏற்கனவே பல்வேறு நலத்திட்டங்களை தானே முன்வந்து தனது சொந்த செலவில் செய்து அத்தொகுதி மக்களின் நன்மதிப்பை ரோஜா பெற்று வைத்திருந்தார்.
அந்த தேர்தலில் ரோஜா வெற்றி பெற்று ஜெகன் மோகன் தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக ஆந்திர சட்டமன்றத்துக்குள் நுழைந்தது. எந்தக் கட்சியால் ஓரம்கட்டப்பட்டாரோ, அதே கட்சியின் வேட்பாளரையே தோல்வியடைய செய்தார் ரோஜா. அந்த வெற்றிக்கு பிறகு இப்படிக் கூறினார் ரோஜா, “நான் ‘அயர்ன் லெக்’ அல்ல, ‘கோல்டன் லக்’ என்பதை நிரூபித்துள்ளேன்.” அதேபோன்று, 2019 தேர்தலிலும் நகரியில் வெற்றி பெற்று தற்போது அமைச்சராகவும் ஆகியுள்ளார் தமிழகத்து மருமகள் ‘
கோல்டன் லெக்
’ ரோஜா.